சென்னை:  நடிகர் விஜயின் தவெக முதல் பொதுக்குழுவில், இருமொழி கொள்கை – சட்டம் ஒழுங்கு – டாஸ்மாக் உள்பட 17 தீர்னமானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன,

இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, தொகுதி மறுவரையறை தேவையில்லை, வஃபு மசோதாவுக்கு எதிர்ப்பு, தமிழ்நாட்டில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு, டாஸ்மாக் ஊழல் உள்பட  மொத்தம் 17 தீர்மானங்கள்   உள்பட தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம்  இன்று திருவான்மியூரில்  உள்ள தனியார் மண்டபம் ஒன்றில்,  அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 2,100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர். கட்சி தொடங்கப்பட்ட பின்பு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

கூட்டம் தொடங்கியது, கட்சியின் தலைவர் விஜய் உள்பட அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து 17 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

தீர்மானத்தில்,   மாநில அரசுகளுக்கான அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும், இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தேவையில்லை, சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு , மீனவர்கள் போராட்டத்துக்கு தீர்வு, இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும் உள்பட மொத்த 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பொதுக்குழு நடைபெறுவதையொட்டி, விஜய், இன்று காலைலேயே கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு  வந்து முன்னேற்பாடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து காலை 10 மணியளவில் வழக்கம் போல் வெள்ளை சட்டையுடன் அரங்குக்கு விஜய் வந்தார். அப்போது அரங்கில் கூடியிருந்த பொதுக்குழு உறுப்பினர்களை பார்த்து கையசைத்தவாறும், கும்பிட்டவாறும் மேடைக்கு வந்தார்.

உறுப்பினர்களும் தவெக, தவெக என முழக்கமிட்டு விஜய்க்கு வரவேற்பளித்தனர்.

பொதுக்குழு கூட்டத்துக்கான மேடையில் விஜய்யுடன் உறுப்பினர் சேர்க்கை பிரிவு செயலாளர் விஜயலட்சுமி, தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், துணைச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

தீர்மானங்கள் விவரம்:

  1. “இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு,
  2. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது,
  3. சமூக நீதியை நிலைநிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்,
  4. டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்,
  5. மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்,
  6. நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை,
  7. மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்,
  8. சென்னை ECR இல் உருவாகும் பன்னாட்டு அரங்கிற்கு தந்தை பெரியார் பெயர் சூட்ட வேண்டும்,
  9. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை ஏமாற்ற வேண்டாம். ஜாக்டா ஜியோ வலியுறுத்தும் 10 அம்ச கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும்,
  10. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்குக் காரணமான திமுக அரசுக்கு கண்டனம்,
  11. பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை,
  12. தமிழக வெற்றி கழகத்தின் ஐம்பெரும் கொள்கை தலைவர்களின் வழியில் சமரசம் இன்றி பயணிக்க வேண்டும்,
  13. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்,
  14. தேர்தல் சார்ந்த முடிவுகள், மக்கள் சந்திப்பு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் சுற்றுப்பயணங்கள் தொடர்பான முடிவுகள் எடுப்பதற்கு தலைவருக்கே முழு அதிகாரம்,
  15. வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு,
  16. புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்,
  17. கழகத்திற்காக அயராத உழைத்து மறைந்த செயல்வீரர்களுக்கு இரங்கல்,

உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.