கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தாமரைசேரி மலைப்பகுதியில் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் 3 பைக்குகளில் ‘ஹில் ரைட்’ சென்றனர்.

இதில் அபினவ் (20) மற்றும் அனீஷ் (26) ஆகியோர் சென்ற பைக் மீது ஆறாவது கொண்டை ஊசி வளைவு அருகே 250 மீட்டர் உயரத்தில் இருந்து உருண்டு வந்த பாறை மோதியது.

பாறை மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் தடுப்புச் சுவரைத் தாண்டி பள்ளத்தில் விழுந்தனர், இதில் அபினவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் அனீஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த மாதம் 16 ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் அவர்களுடன் பின்னால் சென்ற பைக் ஓட்டிவந்த இளைஞரின் ஹெல்மெட்டில் வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவானது.

ஒரு நொடியில் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறலாம் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் தொடர்பான நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் தாமரைசேரி பகுதியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.