பெங்களூரு: கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கான தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, ஓலா, உபர் நிறுவனங்களின் சேவை தடைபட்டுள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தடையால், மாநிலம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகள் ஜூன் 16, 2025 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் மாநில அரசு விதிகளை உருவாக்கும் வரை பைக் டாக்ஸி சேவைகள் இயங்குவதை நிறுத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைக்க கர்நாடக உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. இதனால், இன்று முதல் தடை அமலுக்கு வந்துள்ளது.
ஓலா, உபர் போன்ற நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில், 6 வாரங்களுக்குள் பைக் டாக்ஸி சேவைகளை நிறுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தடை காரணமாக, கர்நாடகாவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் என்று பைக் டாக்ஸி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
முன்னதாக, பைக் டாக்சி தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்த நிலையில், அதுகுறித்து ஆய்வு செய்த கர்நாடக மாநில அரசு, இதற்கு அவ்வப்போது தடை விதித்து வந்தது. இதையடத்து, கடந்த 2022 ஆம் ஆண்டில், மோட்டார் சைக்கிள்களைப் போக்குவரத்து வாகனங்களாகப் பதிவு செய்ய அனுமதிக்கவும், பைக் டாக்ஸி ஒருங்கிணைப்பை அனுமதிக்கவும் மனுதாரர்கள் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, நீதிமனற்ம், ஒரு இடைக்கால உத்தரவுவிட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தடுத்தது. இருப்பினும், ஏப்ரல் 2, 2025 அன்று வெளியான தீர்ப்பு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பில் பைக் டாக்ஸிகளின் விளைவுகள் குறித்த 2019 நிபுணர் குழு அறிக்கையைக் குறிப்பிட்டு, அவர்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்தது. மேலும், மூன்று மாதங்களுக்குள் விதிகளை உருவாக்கவும் மாநிலத்திற்கு உத்தரவிட்டது. ஆனால், அரசு அதைச் செய்ய மறுத்துவிட்டது.
போக்குவரத்துத் துறை செயலாளர் என்.வி. பிரசாத், பைக் டாக்ஸிகளுக்கான எந்த விதிகளும் உருவாக்கப்படாது என்றும், பங்குதாரர்களுடன் எந்த விவாதமும் நடக்கவில்லை என்றும் உறுதிப்படுத்தினார். ஜூன் 15 காலக்கெடுவிற்கு முன்பு போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் கமிஷனர் யோகேஷ் ஏ.எம், கொள்கை இல்லாமல் தனிப்பட்ட இரு சக்கர வாகனங்களை பைக் டாக்ஸிகளாக சட்டப்பூர்வமாகப் பயன்படுத்த முடியாது என்று கூறினார்.
இந்தத் தடை லட்சக்கணக்கான ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.