புகழ்பெற்ற இனிப்பு தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமான பிகானெர்வாலா நிறுவனர் லாலா கேதர்நாத் அகர்வால் திங்களன்று காலமானார், அவருக்கு வயது 86.

1905 ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் பிகானெர் நகர வீதிகளில் ரசகுல்லா மற்றும் ஒம்பொடி போன்றவற்றை தலையில் சுமந்து விற்றுவந்த இவரது குடும்பம் 1950 ல் டெல்லிக்கு குடிபெயர்ந்தது.

டெல்லியில் தனது சகோதரருடன் சேர்ந்தது சாலையோர கடையை அமைத்த கேதர்நாத் அகர்வால் மற்றும் அவரது சகோதரரை பிகானெர்-வாலா என்று அவரது சொந்த ஊர் பெயரை வைத்தே அவரது வாடிக்கையாளர்கள் அழைத்தனர்.

அதேயே தனது கடைப்பெயராக மாற்றி சாந்தினி சவுக் பகுதியில் கடையை வைத்த கேதர்நாத் அகர்வால் பின்னாளில் அவரது கடையிருக்கும் தெருப்பெயரே பிகானெர்வாலா தெரு என்று அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்தார்.

தனது இனிப்பு சாம்ராஜ்யத்தை டெல்லி மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விரிவுபடுத்திய கேதார்நாத், நியூசிலாந்து, சிங்கப்பூர், நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) போன்ற நாடுகளில் மட்டுமல்லாமல் வெகு சமீபமாக சென்னை மக்களையும் தனது ரசகுல்லாவால் கவர்ந்தார்.

இவரது மறைவு குறித்து அவரது மகனும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான ஷியாம் சுந்தர் அகர்வால் கூறுகையில், “காகாஜியின் மறைவு பிகனெர்வாலாவுக்கு மட்டுமல்ல; இனிப்பு தயாரிப்பு தொழிலில் ஒரு வெற்றிடமாகும்” என்று கூறியுள்ளார்.