பாட்னா
பீகாரில் வங்கிக்குச் சென்ற ஒரு பெண் 7 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு அவரது குழந்தை அந்த கும்பலால் ஆற்றில் வீசபட்டு கொல்லப்பட்டு ள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள புக்சர் மாவட்டத்தில் ஓஜாகா பரான் என்னும் ஊரில் ஒரு பெண் தனது 6 வயது குழந்தையுடன் வசித்து வந்தார். அந்த பெண் நேற்று பக்கத்து ஊரில் அமைந்துள்ள வங்கிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் பெண்ணையும் குழந்தையையும் கடத்தி சென்றுள்ளது.
அந்த கும்பல் அந்தப் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விவரத்தை அந்தப் பெண் வெளியே சொல்லலாம் என எண்ணிய அவர்கள் அப்பெண்ணையும் அவரது குழந்தையையும் கைகால்களைக் கட்டி அங்கு ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் வீசி உள்ளனர். அந்த பெண் செய்வதறியாது கூச்சல் இட்டுள்ளார்.
அதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை காப்பாற்றி உள்ளனர். ஆயினும் பெண்ணின் குழந்தை ஆற்று நீரில் மூழ்கி மரணம் அடைந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கொடூரத்தைச் செய்த 7 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர் இந்த கும்பலில் இருந்த யாதவ் மற்றும் மீனா ராம் ஆகிய இருவர் குறித்த அடையாளங்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ளதாக கூறி உள்ளனர்.