சஹர்சா:

மாடு மிரண்டு ஓடியதால் ஆத்திரமடைந்த அதன் உரிமையாளர் தாக்கியதில் வேன் டிரைவரின் கண் பார்வை பறிபோனது.

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து வடக்கு பகுதியில் 250 கி.மீ தொலைவில் உள்ள சஹர்சா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள சோன்பார்சா காவல்நிலைய எல்லையில் உள்ளது மைனா கிராமம். இதன் அருகில் உள்ள பகால்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மண்டால், வயது 30. வேன் டிரைவர்.

சம்பவத்தன்று இவர் வீட்டிற்கு வேனில் திரும்பிக் கொண்டிருந்தார். மைனா கிராமத்தில் உள்ள தேசிய நெ டுஞ்சாலையில் வேன் வந்தபோது சாலையில் ஒரு மாடு உலாவிக் கொண்டிருந்தது. இதை கண்ட மண்டால் ஹாரன் அடித்தார்.

இதனால் மாடு மிரண்டு ஓடியது. இதை கண்ட மாட்டின் உரிமையாளர் ராம் துலர் யாதவ் டிரைவரை தடியால் தாக்கினார். இதில் மண்டாலின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மண்டாலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு நினைவு திரும்பிய அவர் இடது கண்ணால் பார்க்க முடியவில்லை என்று கூறினார். மண்டலின் இடது கண்ணில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டே இருந்தது. அவரது கண் பார்வை இழந்துவிட்டது என்று அவரை பரிசோதித்த டாக்டர் தெரிவித்தார்.

இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக சஹர்சா மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து சோன்பார்சா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை மாட்டின் உரிமையாளரான ராம் துலர் யாதவ் மறுத்துள்ளார்.