பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) போது கிட்டத்தட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பயிற்சி, அரசியல் புயலைத் தூண்டியுள்ளது, எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தன.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து இன்று நடைபெற்ற விசாரணையின் போது நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரத்தை தேர்தல் ஆணையம் அதன் வலைத்தளத்தில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் இந்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் அவை வாக்காளர் எண்ணைக் கொண்டு தேடும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, இதுகுறித்து நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் “இந்த விவரங்கள் ஏற்கனவே அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் பகிரப்பட்டுள்ளன” என்று கூறியது.

“குடிமக்களின் உரிமைகள் அரசியல் கட்சிகளைச் சார்ந்து இருப்பதை நாங்கள் விரும்பவில்லை” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க வாக்காளர்களுக்கு 30 நாள் அவகாசம் வழங்கவும் வலியுறுத்தியது.

மேலும், ஆகஸ்ட் 22 ஆம் தேதிக்குள் இணக்க அறிக்கையை சமர்ப்பிக்கவும் உச்ச நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (ECI) உத்தரவிட்டுள்ளது.

பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்ட எந்தவொரு வாக்காளரும் தங்கள் ஆதார் அட்டையைச் சமர்ப்பிப்பதன் மூலம் மீண்டும் இணைப்பதற்காக கோரிக்கையை தாக்கல் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

ஒவ்வொரு நபரின் பெயரையும், நீக்கத்திற்கான காரணத்தையும் செய்தித்தாள்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் கூறி நீக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலுக்கு பரந்த விளம்பரம் அளிக்குமாறு கூறியுள்ளது.

தவிர, நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் முழு விவரங்களையும், அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்களையும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.