பாட்னா: டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பீகாரில் பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் 34வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் பலகட்ட பேச்சுவார்த்தைகளில் எவ்வித முடிவும் எட்டப்படாததால் போராட்டம் முற்று பெறவில்லை.

அவர்களுக்கு பல்வேறு மாநிலங்களில் விவசாய அமைப்புகள் ஆதரவு அளித்து வருகின்றன. பீகார் மாநிலத்திலும், விவசாய அமைப்பினரும், இடது சாரிகளும் இணைந்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி பேரணியில் ஈடுபட்டனர்.

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், காவல்துறை பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. எனினும் போராட்டக்காரர்கள் காவல்துறையின் தடையை மீறி ஆளுநர் மாளிகை நோக்கி முன்னேறினர்.

அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.