அவ்கில், பீகார்
பீகாரில் இரு சிறுநீரகமும் செயல் இழந்த மகளுக்கு அவர் பெண் என்பதால் பெற்றோர் சிறுநீரக தானம் செய்ய மறுத்துள்ளனர்.
பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள அவ்கில் என்னும் சிற்றூரில் கஞ்சன் குமாரி என்னும் பெண் வசித்து வருகிறார். அவர் தற்போது நடந்த மெட்ரிக் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த மகிழ்ச்சியை அவரால் மறக்க முடியாத போதிலும் அதை முழுமையாகக் கொண்டாடாத இயலாத நிலை உண்டாகி இருக்கிறது.
கஞ்சன் குமாரி திடீரென நோய்வாயபட்டுள்ளர். அதை ஒட்டி அவர் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் உடல்நிலை சரி ஆகாததால் அவர் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்வி நிலைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு நடந்த பரிசோதனையில் அவருடைய இரு சிறுநீரகமும் பழுதடைந்தது கண்டறியப்பட்டது.
அவருக்குச் சிறுநீரகம் மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அறுவை சிகிச்சைக்குப் பணம் இல்லை எனத் தெரிவித்த கஞ்சன் குமாரியின் பெற்றோர் அவரை தங்கள் இல்லத்துக்கு அழைத்துச் சென்று உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அதிர்ச்சியூட்டும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்த அறுவை சிகிச்சைக்கு முதல்வர் நிதியில் பணம் பெறலாம் என இருந்தும் பெற்றோர் முயற்சி செய்யவில்லை என்பதுதான் ஆகும்.
இது குறித்து விசாரித்ததில் அந்தப் பெண்ணுக்கு அவருடைய தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருடைய சிறுநீரகமும் ஒத்துப் போன போதிலும் அவர்கள் தானம் அளிக்க மறுத்தது முக்கிய காரணம் எனத் தெரிய வந்துள்ளது. இது குறித்து அந்த பெண்ணின் தந்தை , “அவள் ஒரு பெண். பெண்ணுக்கு யார் சிறுநீரக தானம் செய்வார்கள்?” என பதில் அளித்துள்ளார். இதில் மேலும் கொடுமை அந்த பெண்ணின் தாயும் அதையே கூறி உள்ளார்.
ஆணுக்குப் பெண் சமம் என்பது இன்னும் ஏட்டளவில் மட்டும் இருப்பதாக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.