போதிபிகா, பீகார்
பீகார் சட்டசபை முன்னாள் மேலவை உறுப்பினரும் பாஜக தலைவருமான அனுஜ் குமார் சிங் என்பவரின் இல்லம் மாவோயிஸ்டுகளால் தகர்க்கப்பட்டுள்ளது.
ஆயுதம் தாங்கிய கம்யூனிஸ்டுகளான மாவோயிஸ்டுகள் பீகார் மாநிலத்தில் அதிகம் உள்ளனர். இவர்கள் மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் இவர்கள் குண்டு வீசி தாக்குதல்கள் நடத்தி உள்ளனர். பீகார் மாநிலத்தின் மகத் பகுதியில் இவர்கள் ஏராளமான வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலை மகத் பகுதியில் உள்ளவர்கள் புறக்கணிக்க வேண்டும் என மாவோயிஸ்டுகள் வற்புறுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கயா மாவட்டத்தின் போதிபிகா கிராமத்தில் அவர்கள் புகுந்து தேர்தல் புறக்கணிப்பு நோட்டிஸ்களை வீடு வீடாக வீசி உள்ளனர். அத்துடன் அங்குள்ள இளைஞர்கள் யாரும் எவ்வித தேர்தல் பணிகளிலும் ஈடுபடக் கூடாது என மிரட்டி உள்ளனர்.
அந்த பகுதியின் பாஜக தலைவரும் சட்டசபை முன்னாள் மேலவை உறுப்பினருமான அனுஜ் குமார் சிங் என்பவரின் இல்லத்தை தகர்த்துள்ளனர். அது மட்டுமின்றி வழியில் சென்றுக் கொண்டிருந்த அனுஜ் குமாரின் மருமகனையும் மீதும் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். அவர் குண்டு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அனுஜ்குமார் இவர்களின் வன்முறைகளை எதிர்த்து வருவதால் ஏற்கனவே இவர் வீட்டை ஒருமுறை மாவோயிஸ்டுகள் தாக்கி உள்ளனர். அது மட்டுமின்றி சென்ற வாரம் தேர்தலின் போது காவல்துறையினர் தங்க திட்டமிட்டிருந்த நடுநிலைப் பள்ளியையும் தகர்த்துள்ளனர்.
பீகார் மாநில காவல்துறை கயா மாவட்டத்தில் கண்காணிப்பை அதிகப்படுத்தி உள்ளது.