
பாட்னா: தான் வளர்க்கும் யானைகளின் பெயரில், தனது கோடிக்கணக்கான சொத்தில் பாதியை எழுதி வைத்துள்ளார் ஒரு அதிசய மனிதர்! இந்த சம்பவம் பீஹார் மாநிலத்தில் நடந்துள்ளது.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த அக்தர் இமாம் என்பவர் ஆசிய யானை மறுவாழ்வு மற்றும் வன விலங்கு டிரஸ்ட் தலைமை நிர்வாகியாக உள்ளார். இவருக்கு சிறு வயது முதலே யானைகள் மீது பிரியம் அதிகம். இதனால், இவர் இரண்டு யானைகளை தன் வீட்டில் செல்லமாக வளர்த்து வருகிறார்.
அந்த யானைகளுக்கு மொடி மற்றும் ராணி என பெயர் வைத்து, தனது குடும்பத்தினரை போல் கவனித்துக் கொள்கிறார். அவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். ஆனால், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அனைவரும் தனியே சென்று விட்டனர். அக்தர் இமாம் மட்டும் யானைகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், தனது சொத்தில் பாதியை யானைகள் பெயரில் அக்தர் எழுதி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பெயரில் உள்ள ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துகளில் ரூ.5 கோடியை மனைவி மற்றும் மகன்கள் அனுபவித்து வரும் நிலையில், எஞ்சிய ரூ.5 கோடி சொத்தை யானைகள் பெயரில் அக்தர் எழுதி வைத்துள்ளார். யானைகள் மறைவிற்கு பிறகு, அந்த சொத்துகளின் பராமரிப்பு அறக்கட்டளையின் பொறுப்பில் சென்று விடும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், என்னைக் கொலை செய்ய முயன்றனர். ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து தாக்க முயன்றனர். ஆனால், யானைகள் சத்தம் போட்டு எழுப்பின. இதனால் நான் தப்பித்தேன். என்னைக் கொல்ல வந்தவர்கள் ஓடிவிட்டனர். எனது மகன் என் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி காவல் துறையில் புகார் அளித்து சிறையில் அடைத்தார். ஆனால், குற்றச்சாட்டுகள் பொய் என நான் நிரூபித்ததும் அவர்கள் பிரிந்து சென்று விட்டனர்.
எனது மகன், யானையை கடத்தல் கும்பலிடம் விற்க முயன்றார். ஆனால் பிடிபட்டுக் கொண்டார். யானைகளின் பெயரில் நான் சொத்தை எழுதி வைத்ததால், குடும்பத்தினரிடம் இருந்து எனக்கு அச்சுறுத்தல் உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]