பாட்னா: பீகாரில் நேற்று (நவம்பர் 11) நடைபெற்ற 2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இதுவரை இல்லாத அளவுக்கு பீகார் மாநிலத்தில் வரலாறு காணாத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 2-ம் கட்டத்தில் 68.52% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, பீகாரில், ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பீகாரில், மொத்தம் உள்ள 243 சட்டசபைத் தொகுதிகளில், கடந்த 6-ம் தேதியன்று 121 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ‘ இந்த 121 தொகுதிகளில் மொத்தம் 1,314 வேட்பாளர்கள் உள்ளனர். அதில் 122 பெண் வேட்பாளர்களும், ஒரு திருநங்கை வேட்பாளரும் போட்டியிட்டனர்.
முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவில், பீகார் வரலாற்றில் இல்லாத அளவிற்கு, 64.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 18 மாவட்டங் களில் அன்று நடைபெற்ற வாக்குப்பதிவில், மாலை 5மணி நிலவரப்படி, பெகுசராய் மாவட்டத்தில் அதிகபட்சமாக 67.32% வாக்குகளும், அதற்கு அடுத்தபடியாக ஷேக்புரா மாவட்டத்தில் 52.36% வாக்குகளும் பதிவாகியிருந்தன.
இதையடுத்து நேற்று (நவம்பம் 11) நடைபெற்ற 2-ம் கட்ட வாக்குப்பதிவிலும் புதிய சாதனை படைத்துள்ளது. வரலாறு காணாத வகையில் 68.52% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
‘நேற்று பீகாரில் மீதமிருந்தா 122 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 14.55 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 11 மணி நிலவரப்படி 31.38 சதவீத வாக்குகள் பதிவானது. தொடர்ந்து, மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்த நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 47.62 சதவீத வாக்குகள் பதிவானது. அதைத் தொடர்ந்து, பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 60.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.
மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், 5 மணி நிலவரப்படி 2-ம் கட்ட தேர்தலில் 67.14 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில், இரவு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி அறிவிப்பில், 68.52% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என அறிவித்துள்ளது. இது முதல் கட்டத்தைவிட அதிக அளவாகும். இதனால், வாக்குப்பதிவு சராசரி, இதுவரை பீகார் வரலாற்றில் இல்லாத வகையில் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து பீகாரில் ஆட்சி அமைக்கப் போவது யார்.? என்ற எதிமர்ப்பு எழுந்துள்ளது.