இணைய தளங்களுக்கு எதிராக முதல்வர் போர்க்கொடி..
ஊரடங்கு காரணமாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், ஓ.டி.டி.எனப்படும் இணைய தளங்களில் பயன்பாடு அதிகரித்துள்ளது.
முன்பெல்லாம் சீரியல்கள்,ஓடாத சினிமாக்களை ஒளி பரப்பி வந்த ஓ.டி.டி. தளங்கள் இப்போது புதிய சினிமாக்களை ஒளிபரப்பு செய்கின்றன.
இந்த நிலையில், சினிமா போன்று ஓ.டி.டி. தளங்களின் ஒளிபரப்புக்கு ‘சென்சார்’’ வேண்டும்’’ என்று பீகார் முதல் –அமைச்சர் நிதீஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு நிதீஷ்குமார் நேற்று அவசர கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
’’ டி.டி.எச். மற்றும் கேபிள் டி.வி. சேவையை விட ஓ.டி.டி.சேவையைப் பெறுவதற்குக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதால், பலரும் அதனை நாடிச் செல்கின்றனர்’’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
’’ஆனால் ஓ.டி.டி. தளங்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் மற்றும் சினிமாக்களில் ஆபாசம், வன்முறை அதிகமாக உள்ளதால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ள நிதீஷ்குமார்’’ சினிமா படங்களைத் தணிக்கை செய்வது போல் இணைய தளங்களில் ஒளிபரப்பாகும் ஓ.டி.டியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ‘சென்சார்’’ செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
– பா.பாரதி