விஜயவாடா: தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன் என செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு. 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரமாண்ட வெற்றி என்று கூறினார்.
மக்களவை தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தல் கடந்த மே 13ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாண் ஜனசேனா கட்சி, மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுடன் இணைந்தும் போட்டியிட்டன. அதுபோல, ஒய்எஸ் ஷர்மிளா தலைமையில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டது. இதனால் மும்முனை போட்டி நிலவியது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில், தெலுங்குதேசம் கூட்டணி அமோக வெற்றியை பெற்றுள்ளது. இதனால், ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை இழந்தார்.
தெலுங்குதேசம் கட்சி 135 இடங்களிலும், கூட்டணி கட்சியனா பவன் கல்யாண் கட்சி 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதனால், ஆட்சியை தெலுங்குதேசம் கைப்பற்றி உள்ளது. மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு 4வது முறையாக மீண்டும் வரும் 9 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். அவரது பதவி ஏற்பு விழா அமராவதியில் நடைபெறவுள்ளது. மீண்டும் ஆந்திர மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து இன்று டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்க உள்ளார். இதற்கிடையில், சந்திரபாபு நாயுடுவை இழுக்க இண்டியா கூட்டணி முயற்சித்து வருகிறது. ஆட்சி அமைக்க இண்டியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை வளைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, நடந்து முடிந்த தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. தெலுங்கு தேசத்திற்கு கிடைத்த வெற்றி மக்களுக்கான வெற்றி. என் வாழ்நாளில் இதுபோன்று வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலை நான் கண்டதில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்தும் தெலுங்கு தேசம் கட்சிக்கு விருப்பப்பட்டு வாக்களித்து சென்றுள்ளனர்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தனர். கடந்த 5 ஆண்டுகளாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் தெலுங்கு தேசம் கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களுக்கு சேவையாற்ற அதிகாரத்திற்கு வரும் போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர், தான் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன். பா.ஜனதா கூட்டணியில் உறுதியாக நீடிப்பேன் என்றவர், தன்னைப் பொறுத்தவரை அரசியலில் கூட்டணி விஷயங்களுக்கு தரும் முக்கியத்துவத்தை விட தேச நன்மை மற்றும் மக்கள் நன்மைக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தருவேன் . தற்போது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கமாக நாங்கள் இந்த வெற்றியை பெற்றுள்ளோம். பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறேன் என்றார்
நாட்டு மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக கூறிய நாயுடு, நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மக்கள் எங்களுக்கு வாக்களித்து உள்ளனர். கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் மிக மோசமான துன்பங்களை சந்தித்தேன். தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா கட்சிகள் இணைந்து பணியாற்றியதால் இந்த வெற்றி கிடைத்தது.
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் என்னை எதற்காக கைது செய்தார்கள் என்பதற்கு சரியான விளக்கம் தரப்படவில்லை. நான் பல்வேறு அரசியல் மாற்றங்களை பார்த்திருக்கிறேன். நான் அனுபவமிக்கவன். தேசம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை செய்ததால் தேர்தலில் வென்றோம். உள்துறை மந்திரி அமித்ஷா, கூட்டணி கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோருக்கு நன்றி.
இவ்வாறு கூறினார்.