தருமபுரி: தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஒரு சில வாரங்களில் பெரிய அரசியல் மாற்றங்கள் வர இருப்பதாக பாமக த9லவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கூட்டணிகள் உருவாகி தேர்தல் களமும் பரபரப்பு அடைந்துள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் நடத்தும் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தமும் தொடங்கி உள்ளது. இதனால் அரசியல் களம் மேலும் சூடாகி உள்ளது.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள ஈச்சம்பாடி அணை பகுதியை பார்வையிட்டார். தொடர்ந்து கடத்தூர், மொரப்பூர், அரூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 60 ஏரிகளுக்கு உபநீரை நீரேற்று மூலம் கொண்டு செல்லும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தும் வகையில், விவசாயிகளுடன் இணைந்து அந்த திட்டத்தை பார்வையிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் இல்லை. அவரை கட்சியிலிருந்து நீக்கி விட்டோம். அவரை பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என்று சொல்ல வேண்டாம் என தனது கட்சியினரிடையே அறிவறுத்தினார்.
தொடர்ந்து பேசியவர், “ஈச்சம்பாடி தடுப்பணை வெள்ளையர்கள் காலத்திலே கட்டப்பட்டது. இந்த தடுப்பணையில் நீரேற்று மூலமாக நீர் எடுத்து ஈச்சம்பாடி நீரேற்று திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நோக்கத்தில் இங்கு வருகை புரிந்துள்ளேன். நீரேற்று திட்டம் நிறைவேறினால் கிட்டத்தட்ட 8,000 ஏக்கர் கூடுதலாக விவசாயம் செய்யலாம்.
எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சி காலத்தில் இந்த திட்டத்தை அறிவித்தார். தற்போதுள்ள முதலமைச்சர் தேர்தலுக்கு முன்பு நாங்கள் வெற்றி பெற்றால் நிறைவேற்றுவோம் என வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், தேர்தலில் வென்றும் அவர்களால் இன்று வரை திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
இப்போது இத்திட்டத்தின் மதிப்பு 587 கோடி ரூபாயாக உள்ளது. முதன்முதலாக இத்திட்டத்தின் மதிப்பு 260 கோடி ரூபாய் மட்டுமே. அணை ஆழம் 17 அடி. ஆனால், தற்போது 10 அடிக்கு அணையில் மண் தூர்ந்துள்ளது” எ்ன்றார்.
மேலும் பேசிய அன்புமணி ராமதாஸ், “தருமபுரி – மொரப்பூர் ரயில் திட்டத்தை நிறைவேற்ற தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த திட்டத்திற்கு இன்று வரை நிலத்தை கையகப்படுத்தி வழங்கவில்லை. தருமபுரி மக்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? அவர்கள் பாவப்பட்ட மக்கள்” என்றார்.
பேட்டியின் போது தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலுச்சாமி உள்ளிட்டர் உடன் இருந்தனர்.