டெல்லி: சாபஹார் ரயில் திட்டத்திலிருந்து இந்தியா விலக்கப்பட்டுள்ளது பெரிய நஷ்டம் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
ஈரானின் முக்கிய துறைமுகமான சாபஹாரில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள ஜாஹேடன் பகுதிக்கு இந்தியா சார்பாக ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஈரான் – ஆப்கானிஸ்தான் இடையே வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.
4 ஆண்டுகள் ஆகியும் இந்த பணியை இந்தியா தொடங்காமல் உள்ளது என்று ஈரான் கூறி வந்தது. இதையடுத்து, இந்தியாவை இந்த ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் நீக்கியுள்ளது.
இந்த திட்டத்தில் இருந்து இந்தியா விலக்கப்பட்டுள்ளது பெரிய இழப்பு என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி தன் ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
இந்தியாவை சாபஹார் துறைமுகத்திட்டத்திலிருந்து ஈரான் விலக்கி வைத்து இருக்கிறது. எந்த வேலையையும் செய்து முடிக்கும் முன்பே மோடிக்கு மாலைகள் விழுகின்றன. மோடியின் ராஜதந்திரம் இந்த அளவுக்கு தான் உள்ளது. ஆனால் சீனா அழகாக செயல்பட்டு, சிறந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளத. இது இந்தியாவுக்கு பெரிய நஷ்டம், ஆனால் இது பற்றி நாம் கேள்விகள் கேட்க முடியாது என்று விமர்சித்துள்ளார்.