அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (நவம்பர் 13) வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் நடைபெற உள்ள இந்த சந்திப்பு வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜனநாயகத்தின் கீழ் அமைதியான அதிகார பரிமாற்றத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், வெளிச்செல்லும் ஜனாதிபதி மற்றும் வரவிருக்கும் ஜனாதிபதிக்கு இடையில் இத்தகைய சந்திப்பு வழக்கமான ஒன்று என்று கூறப்படுகிறது.

இருந்தபோதும் 2020 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியடைந்த டிரம்ப், அந்த தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனை சந்திக்க அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பைடன் பதவியேற்பு விழாவைப் புறக்கணித்து தனது புளோரிடா இல்லத்திற்கு சென்றார் டிரம்ப்.

தற்போது நடந்து முடிந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றதை அடுத்து அவரை அழைத்து வாழ்த்து கூறிய ஜோ பைடன், அவரை சந்திக்க இருப்பதாக கடந்த வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

தவிர, ஜனவரி 20ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் பதிவியேற்பின் போது அதிகாரப் பரிமாற்றம் அமைதியான முறையில் நடைபெறும் எனவும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.