அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் பலருக்கு பல ஆண்டுகளாக கிரீன் கார்ட் எனும் அமெரிக்க குடியுரிமை வழங்கப்படாமல் இருந்தது, மேலும் அமெரிக்க வேலைக்கு வழங்கப்படும் ஹெச்1-பி விசாவிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தது.

ஹெச்1-பி விசாவில் வேலைக்கு சென்றவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அங்கு வேலை செய்வதற்கும், அவர்களுடன் நீண்டநாட்கள் தங்குவதற்கும் முட்டு்க்கட்டை போட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் அமெரிக்க அரசு நிர்வாகத்தில் பல்வேறு மாறுதல்களை செய்து வருகிறார்.

அந்த வகையில் அமெரிக்க குடியுரிமை சட்டத்திலும் திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறார், இதனால் ஒரு கோடிக்கும் அதிகமான வெளிநாட்டினர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயர் படிப்பிற்காக அமெரிக்கா சென்று அங்கேயே வேலை கிடைத்து தங்கியிருப்பவர்கள் உள்ளிட்ட, கடந்த பத்தாண்டுகளாக கிரீன் கார்ட் கிடைக்காமல் அங்கு இருக்கும் இந்தியர்களுக்கு இது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று பைடன் நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்க நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் இவர்களின் பங்களிப்பு பாராட்டுதலுக்கு உரியது, அதேவேளையில் அவர்களின் நியாயமான கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்று தெரிவித்ததோடு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள தலைவர்களிடம் இது குறித்து தான் விவாதிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த புதிய சட்டத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச விசா வழங்கும் நடைமுறையில் தளர்வுகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் மெக்ஸிகோ போன்ற நாடுகளில் இருந்து ஊடுருவியவர்களுக்கும் சட்டபூர்வமாக தங்குவதற்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.