திம்பு, பூட்டான்
பூட்டான் பிரதமரான டாக்டர் லொடே ஷேரிங் வார இறுதி நாட்களில் மக்களுக்கு இலவச மருத்துவம் பார்க்கிறார்.
பூட்டான் பிரதமரான லோடே ஷேரிங் அரசியலுக்கு வரும் முன்பு புகழ்பெற்ற சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணராக விளங்கினார். அவர் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மருத்துவக் கல்லூரியில் சிறுநீரக மருத்துவத்தில் சிறப்பு கல்வி பெற்றுள்ளார். அது மட்டுமின்றி உலக சுகாதார நிறிவனத்தின் ஃபெல்லோஷிப் அங்கீகாரமும் பெற்றுள்ளார். பூட்டான் நாட்டில் பல நுட்பமான சிறுநீரக அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார்.
நிர்வாகத்துறையிலும் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர் பூட்டான் நாட்டின் ஒரே சிறுநீரக மருத்துவ நிபுணர் ஆவார். அத்துடன் இவர் ஆளும் கட்சியான துருக் நியம்ரூப் சொக்பா கட்சியின் தலைவராகவும் உள்ளர். தற்போது இவருக்கு 51 வயதாகிறது. அர்சியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே இவர் தன்னிடம் வரும் ஏழை நோயாளிகளிடம் பணம் வாங்காமல் இலவச சிகிச்சை அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தற்போது பூட்டான் பிரதமர் பதவியில் உள்ள போதும் தனது மருத்துவ பணியை லோட்சே தொடர்ந்து நடத்தி வருகிறார். சனிக் கிழமைகளில் காலை வேளையில் இவர் தனது பிரதமர் பணிகளை சற்று நிறுத்தி வைத்து விட்டு மருத்துவம் பார்த்து வருகிறார். இந்த வார இறுதி நாளில் மூன்று மணி நேரம் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.
பொதுவாகவே அரசியலில் இருப்போர் ஆதாயங்களுக்காக மட்டுமே அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மை. அப்படி இருக்க ஒரு நாட்டின் பிரதமர் மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை செய்வது மிகவும் ஆச்சரியமான விஷயமாக உலக நாடுகள் பார்த்து வருகின்றன