வாரணாசி

னாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த வன்முறை மற்றும் காவல்துறை தடியடி குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் தனது அறிக்கையில்  நடவடிக்கை எடுக்காத முதல்வர் யோகி அரசை குற்றம் சாட்டி உள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பயிலும் ஒரு மென்கலை மாணவி பல்கலை வளாகத்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளானார்.   அவர் பல்கலைக்கழக விடுதியிலுள்ள தனது அறைக்கு செல்லும் போது நடந்த இந்த பாலியல் சீண்டலின் போது அருகில் இருந்த காவலர்கள் அவருடைய உதவிக்கு வரவில்லை.   இதனால் மாணவர்கள் பல்கலைக் கழகத்தின் அலுவலகம் முன்பு தங்கள் போராட்டத்தை தொடங்கினர்.

அப்போதைய துணை வேந்தர் திரிபாதி மாணவர்களை சந்திக்க மறுத்து விட்டார்.   மேலும் இந்த போராட்டத்தை மாநில அரசும் கண்டு கொள்ளவில்லை.   இதற்கிடையில் இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.   பிறகு காவல்துறையினர் தடியடி நடத்தியதில் பல மாணவர்கள் காயமுற்றனர்.   இந்த சம்பவம் குறித்து  அப்போதைய துணை வேந்தர் ஓய்வு பெற்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தீக்‌ஷித்தை ஒரு நபர் விசாரணை ஆணையமாக அறிவித்தார்.

நீதிபதி தீக்‌ஷித் தனது விசாரணை முடிவுகளை அறிக்கையாக மத்திய அரசுக்கு அளித்துள்ளார்.  அந்த அறிக்கையில், “துணை வேந்தர் மீது எந்த தவறும் தெரியவில்லை.  பல்கலைக் கழக அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் உடனடியாக நடந்ததை விசாரித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.    துணை வேந்தருக்கு பதில் பல்கலைக்கழக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்துள்ளனர்.

யோகியின் தலைமையிலான மாநில அரசு இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.    இந்த பாலியல் புகார் மாணவர் போராட்டம் வரை போகாமல் காவல்துறை நடந்துக் கொண்டிருக்க வேண்டும்.    மாணவிகளின்  பாதுகாப்புக்கு காவல்துறை உத்திரவாதம் அளித்து புகாருக்கு உடனடியாக விசாரணைக்கு காவல்துறை உத்தரவிட்டிருக்க வேண்டும்.

மேலும் மாணவர்கள்  போராட்டம் நடத்திய செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி அன்று மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை.   மேலும் காவல்துறையினர் கூட்டத்தை அமைதியான முறையில் கட்டுப்படுத்த எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.   மேலும்  பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்ட பாதுகாப்பு உதவிகளை செய்யாததால் போராட்டம் வன்முறையாக மாறி உள்ளது.

இந்த மாணவர் போராட்டம் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது.   வெளியில் இருந்த சில விரும்பத் தகாத நபர்கள் அந்த மாணவர் கூட்டத்தில் ஊடுருவி உள்ளனர்.   அவர்களின் நோக்கம் பிரதமரின் வருகையின் போது வன்முறை நிகழ வேண்டும் என்பதும்  பல்கலைக்கழகம் மற்றும் துணை வேந்தரின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்க வேண்டும் என்பதும் ஆகும்.   பல வன்முறை சக்திகள் உள்ளே புகுந்து இந்த மாணவர் போராட்டத்தை வன்முறை ஆக்கி உள்ளது.  ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சஞ்சய் சிங், அகில இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த சுனில் யாதவ், மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மிருதுயுஞ்சய் சிங் ஆகியோர் இந்த வன்முறைக்கு காரணம் ஆவார்கள்”  என கூறப்பட்டுள்ளது.

திரிபாதி தமக்கு இந்த அறிக்கை பற்றி எதுவும் தெரியாது என பத்திரிகையாளர்களிடம் கூறி உள்ளார்.