வாரணாசி
உடனடியாக விடுமுறையில் செல்லுமாறு பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு நடைபெற்றதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத துணை வேந்தர் இல்லத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணை வேந்தர் கிரீஷ் சந்திர திருபாதி மாணவர்களை சந்திக்க மறுத்து விட்டார். அதனால் கலவரம் உண்டாகி போலீசார் தடியடி நடத்தினர். அதில் பல மாணவர்கள் காயமடைந்தனர்.
கிரீஷ் சந்திர திருபாதியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 27ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கப் படும் என செய்திகள் முன்பு வெளியாகின. தற்போது நடந்த கலவரத்தை தொடர்ந்து அவருடைய பதிவிக்காலத்தை நீட்டிக்க அரசு விரும்பவில்லை. அடுத்த துணை வேந்தரை தேர்ந்தெடுக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. புதிய துணை வேந்தரை தேர்ந்தெடுக்கும் வரை திர்பாதியை விடுமுறையில் செல்ல அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்திரப் பிரதேச அரசும், மத்திய அரசும் பல்கலைக்கழக விவகாரத்தில் முதலிலேயே ஒரு சுமுக முடிவை துணை வேந்தர் எடுக்காததில் கடும் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி நடந்த கலவரத்துக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி குறித்து கிரிஷ் சந்திர திருபாதி எந்தக் கருத்தும் கூறவில்லை. அவரை பல செய்தியாளர்கள் தொலைபேசி மூலமும் குறும் செய்தி அனுப்பியும் அவருடைய கருத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.