வாரணாசி

னாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனை உயர் அதிகாரி பாலியல் சீண்டல் வழக்கில் சிக்கியவர் என்னும் தகவல் வெளியாகி உள்ளது.

பனாரஸ் இந்து பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் சீண்டல் செய்யப்பட்டு அதை கண்டிக்காத நிர்வாகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்ததும் அதன் பின் போலீசாரின் தடியடியால் பல மாணவர்கள் காயமுற்றதும் தெரிந்ததே.   பாலியல் சீண்டல் என்பது அந்த பல்கலைகழகத்துக்கு புதிதில்லை என்பது போல மேலும் ஒரு தகவல் வந்துள்ளது.

பல்கலைக் கழக மருத்துவமனையான சர் சுந்தர்லால் மருத்துவமனையில் மெடிகல் சூப்பிரெண்டெண்ட் ஆக பணி புரிபவர் ஓ பி உபத்யாயா.   இவரை துணை வேந்தர் திருபாதி பணியில் சேர்த்துள்ளார்.  இவரை பணியில் சேர்க்கும் போதே பல்கலைக் கழக நிர்வாக உறுப்பினர் ஒருவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உபத்யாயா முன்பு ஃபிஜி தீவில் ஒரு பெண்ணை பாலியல் சீண்டல் செய்ததாக எழுந்த வழக்கை அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.  அந்த வழக்கின் விவரத்தையும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ஆம் வருடம் நடைபெற்ற அந்த வழக்கில் ஃபிஜி தீவில் வசிக்கும் ஒரு பெண் தன்னை உபாத்யாயா பாலியல் சீண்டல் செய்ததாக கூறி உள்ளார்.  வழக்கில் அந்தப் பெண்  ”உபாத்யாயா, என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு என்னை தனது வீட்டுக்கு அழைத்தார்.  வீட்டுக்குள் சென்றதும் என்னை முத்தமிட்டார்.  தொடக்கூடாத இடங்களில் தொட்டு என்னை பாலியல் சீண்டல் செய்தார்.  தன்னுடன் உறங்க வருமாறு அழைத்தார்” என புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதிகள் உபாத்யாயா அநாகரீகமான முறையில் நடந்துக் கொண்டதாக தெரிவித்துள்ளனர்.  அவர்கள், “வீட்டுக்கு வந்ததும் உபாத்யாயா அந்தப் பெண்ணை முத்தமிட்டது அவரை வரவேற்க என அந்தப் பெண் நினைத்துள்ளார்.  பிறகு அவரை தோளைப் பிடித்து வீட்டை சுற்றிக் காட்ட அழைத்துச் சென்றதும் ஒரு சாதாரண செயல் எனக் கொள்ளலாம்.   ஆனால் அந்தப் பெண்ணை மார்பகம் போன்ற இடங்களில் தொட்டு பாலியல் சீண்டல் செய்ததும் தன்னுடன் உறங்க அழைத்ததும் அநாகரீக செயல்” என தெரிவித்து அவருக்கு தண்டனை அளித்துள்ளனர்.

இது குறித்து உபாத்யாயாவை கேட்டதற்கு அவர், “பல்கலைக் கழக நிர்வாகம் இது குறித்து ஏற்கனவே சட்ட ஆலோசனை கேட்டுள்ளது.   மற்ற நாட்டு நீதிமன்றங்களின் தீர்ப்பு இந்தியாவில் செல்லாது.   மேலும் நான் என் தண்டனைக்கு மேல் முறையீடு செய்ததில் எனது தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.   என் மேல் தொடரப்பட்ட பொய் வழக்கு அது” என தெரிவித்தார்.

அதன் பின் இந்தியா வந்த உபாத்யாயா கடந்த 2016 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் சர் சுந்தர்லால் மருத்துவமனையில் மெடிகல் சூப்பிரண்டெண்டாக பணி புரிந்து வருகிறார்.   இவருக்கு தலைமை மருத்துவ அதிகாரி என்னும் கூடுதல் பொறுப்பும் வாழங்கப்பட்டுள்ளது.