சென்னை: பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தியின் நடைபயணம் நாளை 100-வது நாளை எட்டுகிறது. இதை கோலாகலமாக கொண்டாட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 150 நாட்கள் சுமார் 5 மாதங்கள் நடைபெறுகிறது. ஏற்கனவே தொடங்கப்பட்ட இந்த யாத்திரையானதுஇ 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களை கடந்து காஷ்மீர் செல்ல உள்ளது. இந்த யாத்திரையின்போது, ஒவ்வொரு நாளும் காலை 7 மணி முதல் காலை 10:30 மணியிலும், மீண்டும் மாலை 3:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடைபெற்று வருகிறது. தினமும் 22 முதல் 23 கிலோமீட்டர் தொலைவு வரை நடைப்பயணம் நடைபெறுகிறது. மொத்தம் 3,750 கிலோமீட்டர் தொலைவு நடந்து காஷ்மீரின் ஸ்ரீநகரை இந்த நடைப்பயணம் சென்றடைய உள்ளது.
இந்த நடைபயணம் கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்ரா, மத்திய பிரதேசம் கடந்த தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. வரும் 20ந்தேதிவரை ராஜஸ்தானில் யாத்திரை மேற்கொள்ளும் ராகுலின் 100வது நாள் யாத்திரைத நாளை (16ந்தேதி) ராஜஸ்தான் மாநிலத்தில் பிரமாண்டமாக பிரபல பாடகியின் கச்சேரியுடன் கொண்டாடப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ்., பரப்பிய வெறுப்பு அரசியலை எதிர்த்து மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வல்வபாய் படேல், அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் மேற்கொண்ட தீவிர பரப்புரையை எதிர்த்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு தான் இந்தியா விடுதலை பெற்றது. ஆனால், 1947 இல் சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே விடுதலையை அகிம்சை வழியில் பெற்றுத் தந்த மகாத்மா காந்தியை இழந்தோம். ஆனாலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி இந்திய நாடு ஜனநாயக, மதச்சார்பற்ற நாடாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சியில் பா.ஜ.க. பரப்பி வரும் மதவாத வெறுப்பு அரசியலினால் மக்கள் பிளவுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இதை எதிர்த்து மக்களை ஒன்றுபடுத்துவதற்காக இந்திய ஒற்றுமை பயணத்தைக் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் நெடிய நடைப் பயணத்தை மேற்கொண்டார். இந்த நடைப்பயணம் 12 மாநிலங்களில் 3,500 கி.மீ., தூரத்தை 150 நாட்களில் கடந்து பிப்ரவரி முதல் வாரத்தில் ஜம்மு காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிறைவடைய இருக்கிறது.
தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமைப் பயணத்திற்கு ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து இந்தியர்களும் பெருந்திரளாகப் பங்கேற்று அமோக ஆதரவு அளித்தனர். அத்தகைய பயணங்களில் அரசியல், சமூக, பொருளாதார அடிப்படையில் இந்த நாடு பிளவுபடுத்தப்படுவதை எதிர்த்து பல்வேறு பத்திரிகையாளர்கள் சந்திப்பின் மூலம் ராகுல்காந்தி பிரச்சினைகளை மக்களின் பார்வைக்குக் கொண்டு வந்தார். தற்போது நிலவி வரும் வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை மறுக்கப்படுவது ஆகியவை குறித்தும், வெறுப்பு அரசியலினால் மக்கள் பிளவுபடுத்தப்படுவதை எதிர்த்தும் மத்திய அரசியலமைப்பில் அதிகாரக் குவியலைக் கண்டித்தும் உரத்தக் குரலில் கேள்விக் கணைகளை எழுப்பினார். இதன்மூலம் நாட்டு மக்களிடையே தலைவர் ராகுல்காந்தியின் கேள்விக் கணைகள் குரலற்றவர்களின் குரலாக ஒலித்தது. இந்த ஒற்றுமைப் பயணம் நீண்டகாலமாக நிலவி வந்த இந்தியக் கருத்தியலையும், கலாச்சார பன்முகத்தன்மையையும் கொண்டாடுவதாக அமைந்திருந்தது. இத்தகைய செய்திகளின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் எவ்வித தயக்கமோ, தடையோ இன்றி ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் லட்சக்கணக்கான மக்கள் இணைந்தனர்.
விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் தலைமையில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் மகாத்மா காந்தியுடன் ஜவஹர்லால் நேரு நடைப்பயணம் மேற்கொண்டார். அதேபோல, மகாத்மா காந்தியின் கொள் பேரன் துஷார் காந்தி, பண்டித நேருவின் கொள்ளுப் பேரன் ராகுல்காந்தியோடு நடைப்பயணம் மேற்கொண்டது இந்திய தேசிய வரலாற்றை நினைவுபடுத்துவதாக இருந்தது. இத்தகைய பயணங்களின் போது மதச்சார்பற்ற கொள்கையை வலிமை சேர்க்கிற வகையில் சர்வ மதங்களைச் சார்ந்த வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று தலைவர் ராகுல்காந்தி உணர்வுப்பூர்வமாக வழிபட்டதை நாட்டு மக்கள் அனைவரும் எண்ணி எண்ணி பெருமிதம் அடைந்தார்கள். இதன்மூலம் இந்தியாவின் மதச்சார்பற்ற பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக கருத்தியலுக்கு அடிப்படையாக அமைந்திருப்பது அமைதி, அன்பு, சகோதரத்துவம், சமநிலைத்தன்மை என்கிற கொள்கைகள் வலிமை பெற்றன.
இந்திய ஒற்றுமை பயணம் நாள்தோறும் அதிகாலை 6 மணிக்கு தொடங்கி சேவாதள அணிவகுப்பு மரியாதையோடு தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியப் பாடல்கள் இசைக்கப்பட்டு உன்னதமான உணர்வுகளோடு நாள்தோறும் தொடங்கப்பட்டது. இதில் பல்வேறு நெகிழ்வு தரக்கூடிய பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்திய தேசிய காங்கிரசை 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமையேற்று நடத்தி வரலாறு காணாத சாதனைகள் நிகழ்த்திய அன்னை சோனியா காந்தி, எதிர்கால இந்தியாவுக்கு வலிமை சேர்க்க இருக்கிற திருமதி. பிரியங்கா காந்தி மற்றும் சமீபத்தில் நடைப்பயணம் மேற்கொண்ட முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் டாக்டர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட இந்திய சமூகத்தின் அற்புத சாதனைகளைப் படைத்த பல்வேறு அறிஞர் பெருமக்கள் இந்த பயணத்தில் தங்களை இணைத்துக் கொண்டு பெருமை சேர்த்தனர். பல இடங்களில் பெருந்திரளான பெண்கள், இளைஞர்கள், தலித் சமுதாயத்தினர், சிறுபான்மை இனத்தினர் குறிப்பாக ஆதிவாசிகளோடு தலைவர் ராகுல்காந்தி நடனமாடிய காட்சிகள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
இந்திய அரசியலின் எதிர்காலத்தை நிர்ணயிக்க இருக்கிற தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் நூறாவது நாள் நிகழ்வை,டிசம்பர் 16 அன்று ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அதையொட்டி அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட, வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் அமைப்புகள் அனைத்தும் கோலாகலமாகக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வுகளின் மூலம் தலைவர் ராகுல்காந்தியின் 100 நாள் இந்திய ஒற்றுமைப் பயணம் இந்திய அரசியலில் ஏற்படுத்தியிருக்கிற தாக்கத்தையும், அதன் சிறப்பம்சங்களையும் மக்களிடையே பரப்புகிற வகையிலும், இந்திய ஒற்றுமைப் பயணத்தின் வெற்றி குறித்தும் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஓரணியில் திரண்டு மிகச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.