ராகுல் காந்தி துவங்கிய இந்திய ஒற்றுமை பயணம் தனது கடைசி கட்ட பயணத்தை காஷ்மீரில் இன்று துவங்கியது.

150 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த யாத்திரை இன்று 133வது நாளாக தொடர்ந்து வருகிறது.

மோசமான வானிலை காரணமாக நேற்று நிறுத்தப்பட்ட யாத்திரை இன்று காலை ஜம்மு-வின் ரம்பன் மாவட்டத்தில் உள்ள பனிஹால் டவுனில் இருந்து மீண்டும் துவங்கியது.

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா இந்த யாத்திரையில் கலந்து கொண்டு ராகுலுடன் கைகோர்த்து நடந்தார்.

பிர் பஞ்சால் மலையின் மையப்பகுதியில் உள்ள நவயுகா சுரங்கப்பாதை வழியாக தெற்கு காஷ்மீரில் உள்ள கிஷீகுந்த் நகரை இன்று காலை சென்றடைந்தது.

பாரத் ஜோடோ யாத்திரை கடைசி கட்டமாக காஷ்மீர் மாநிலத்தில் நுழைந்திருப்பதை அடுத்து கிஷீகுந்த் நகரில் திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு ராகுல் காந்திக்கு அன்பான வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் கிஷீகுந்தில் இருந்து பல்வேறு முக்கிய இடங்கள் வழியாக அனந்த்நாக் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் யாத்திரை துவங்கி ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக மேலும் செல்லவேண்டாம் என்று ராகுல் காந்தியின் பாதுகாவலர்கள் அறிவுறுத்தினர்.

ராகுல் காந்தியின் யாத்திரை ஜம்முவில் நுழைந்ததில் இருந்து சாலையில் இருபுறமும் கயிறு கட்டி வெளியாட்கள் யாத்திரை குழுவுடன் கலந்துவிடாமல் காவல்துறையினர் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர்.

கட்சியின் முக்கிய தலைவர்கள் கூட தங்கள் அடையாளங்களை ஊர்ஜிதப்படுத்திய பின்னரே இந்த கயிறுகளைத் தாண்டி அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

காஷ்மீருக்குள் நுழைந்த பின்னர் காவல்துறையினர் யாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வில்லை என்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களே பாதுகாப்பு அரணாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ராகுலின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்ததை அடுத்து பாதுகாப்பு படையினர் அவரை மேலும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

இதனையடுத்து தனது காரில் ஏறி அனந்த்நாக் சென்றார் ராகுல் காந்தி.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் காவல்துறையினர் பாதுகாப்பில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மேலும் நாளை பயணம் மீண்டும் துவங்கும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தவிர வரும் 30 ம் தேதி காஷ்மீரில் தேசிய கோடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் சிறிது நேரம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு ராகுல் காந்தி கார் மூலம் அனந்த்நாக் சென்றதை அடுத்து தொண்டர்கள் யாத்திரையை தொடர்ந்தனர்.