டெல்லி: மோடி அரசு அமல்படுத்தி உள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் பாரத்பந்த் நடைபெற்று வருகிறது. இதையொட்டி வட மாநிலங்களில்  பல இடங்களில், ஆங்காங்கே சாலைமறியல், ரயில் மறியல், போக்குவரத்துபாதிக்கப்பட்டு உள்ளது.
மத்தியஅரசு புதிதாக 3 வேளாண் சட்ட திருத்தங்களை அமல்படுத்தி உள்ளது. அதன்படி,  விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய அதிக வாய்ப்புகளை அளிக்கும் எனவும், விவசாயிகள் இடைத்தரகர்களால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறி வருகிறது. இந்த வேளாண் சட்டங்கள் மூலம் மாநில அரசுகள் நடத்தும் மண்டி அமைப்பிடம் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் தனியாரிடமும் நேரடியாக வேளாண் பொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால், மத்தியஅரசின் சட்டங்கள் மூலம், விவசாயிகளின் உரிமை பாதிக்கப்பட்டு, கார்ப்பரேட்டுகளிடம் அடிமை வேலை செய்யும் நிலை உருவாகி விடும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறைந்தபட்ச ஆதாரவிலை தடைபட்டுவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில்,  ஆயிரக்கணக்கான விவசாயிகள் 13 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இன்று  (8-ம் தேதி)  விவசாயிகள் சார்பில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கபட்டது.
விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பல தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் இணைந்துள்ளன.  இந்த நிலையில், வட மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக பல மாநிலங்களில் கடைகள் மூடப்பட்டு உள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புல்டனா மாவட்டத்தில் நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
ஒடிசா மாநிலத்தில் இடதுசாரிகள், வியாபார சங்கங்கள், விவசாய சங்கங்கள் இணைந்து புவனேஷ்வர் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரெயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
ஆந்திரா மாநிலத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகிறது. விஜயவாடா நகரில் இடதுசாரிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
புதுச்சேரியில் முழு அடைப்பு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில், மாநில அரசு விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், அரசு அலுவலகங்கள், போக்குவரத்து வழக்கம்போல செயல்பட்டு வருகின்றன. இருந்தாலும், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட பல கட்சிகள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரெயில்,சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.  சாலைகளில் போக்குவரத்து தடை பட்டுள்ளது.