டெல்லி: விவசாய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 13வது நாளாக தொடர்கிறது. அதே வேளையில், விவசாயிகளுக்கு அதரவாக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் நடைபெற்று வருகிறது.
மத்தியஅரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 13வது நாளாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்கின்றனர் . விவசாயிகளுடன் மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வரவில்லை. நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் போராட்டம் தொடர்கிறது. சட்டத்தை திரும்ப பெற முடியாது, திருத்தங்கள் செய்யலாம் என மத்தியஅரசு கூறி வருகிறது. ஆனால், அதை ஏற்க விவசாயிகள் மறுத்து வருகின்றனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8-ந் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர்.
விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை வலுவாக நடத்திட முயற்சியெடுத்து வருகின்றன. அதேவேளை முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் தமிழக அரசும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. எந்த வகையிலும் முழு அடைப்பையொட்டி, பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதித்து விடக்கூடாது என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
டெல்லியில் போராடும் விவசாயிகளின் பாரத் பந்த்துக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் பல்தானா அருகே மல்காபூரில் ரயிலை நிறுத்தி அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி நடத்துகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் செய்யும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டம் வலுக்கிறது.