டில்லி,
வரும் 10-ம் தேதி நாடு முழுவதும் ‘பாரத் பந்த்’ நடைபெறும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்கள் அறிவித்து உள்ளன.
நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்து உள்ளன.
விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விளை பொருட்களுக்கான ஆதார விலையை உயர்த்த வேண்டும், நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயத்தை பாதுகாக்க வேண்டும், சுவாமிநாதன் கமிஷனின் விவசாயி கடன் தள்ளுபடி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம் மாநிலம் உட்பட கிட்டத்தட்ட 15 மாநிலங்களில் விவசாயிகள் 10 நாள் தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1ந்தேதி மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டது நினைவாக இந்த ஆண்டு மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
நேற்றைய போராட்டத்தின்போது, விவசாய அமைப்புகள், விலை பொருட்களை விற்பனைக்கு அனுப்ப மாட்டோம் என்றும், பாலை சாலையில் ஊற்றியும் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தின் கடைசி நாளான ஜூன் 10ந் தேதி “பாரத் பந்த்” என நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று அனைத்து மாநில விவசாய அமைப்புகள் அறிவித்து உள்ளன.