திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று மாலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலை யில், கோவில் கருவறையில்  இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து  அண்ணாமலையார் மலையை சுற்றி பக்தர்களின் கிரிவலம் தொடங்கி நடை பெற்று வருகிறது. திருவண்ணாமலையே பக்தர்களின் கூட்டத்தால் அலைமோதுகிறது.

பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும்  திருவண்ணாமலை திகழ்கிறது. இங்குள்ள  அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையார் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகின்றனர். இக்கோவிலில்,  நடைபெறும் திருவிழாக்களிலேயே கார்த்திகை மாத தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழா கடந்த (டிசம்பர் ) 4ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டம் முடிவடைந்த நிலையில்,  இன்று மாலை 2,668 அடி உயர மலை மீது மலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.

இதையொட்டி, இன்று காலை 3.30 மணிக்கு கோவில் கருவறை எதிரில், பஞ்ச பூதங்கள், ஏகன், அனேகன் என்பதை விளக்கும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மூன்று நாள் விழாவின் முதல் தீபமாக பரணி தீபம் ஏற்றப்பட்டது. இது கார்த்திகை மாதம் பரணி நட்சத்திர நாளில் ஏற்றப்படும் தீபம் ஆகும்.

இதைத்தொடர்ந்து இன்று மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலைஉச்சியில் அனேகன், ஏகன் என்பதை விளக்கும், மஹாதீபமும் ஏற்றப்பட உள்ளன.

தீபத்திருவிழாவையொட்டி, அருணாச்சலேஸ்வரரின் அருள் நாடு முழுவதும் இருந்து பல லட்சம் பேர் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.  தற்போது அங்கு விட்டு விட்டு மழை பெய்து வந்தாலும், அதை பொருட்படுத்தாமல்,  மகாதீபத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் பல லட்சம் பேர் இன்று அதிகாலை முதலே கிரிவலம் செல்லும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மகா தீபத்தை முன்னிட்டு, கோயில் கோபுரம் மற்றும் கோயில் வளாகம் மின்விளக்குகளால் ஜொலிப்பதால் திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது. நகரில் எங்கு பார்க்கிலும் மக்கள் தலைகளாகவே காணப்படுகிறது.

இன்று மாலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்ற 300 பேருக்கு மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி,  பாதுகாப்பு பணியில் 15,000 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.