பெங்களூரின் மெட்ரோ ரயில் கட்டணம் 40-45 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.
மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் ஆன நிலையில் பெங்களூரின் ‘நம்ம மெட்ரோ’ தனது முதல் கட்டண உயர்வை செயல்படுத்த உள்ளது.
குறைந்தபட்ச கட்டணத்தை ரூ. 15 ஆகவும் தற்போது ரூ. 60ஆக உள்ள அதிகபட்ச கட்டணம் ரூ. 85 ஆகவும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அரசு நியமித்த கட்டண நிர்ணயக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டெக்கான் ஹெரால்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL)க்கான முதல் கட்டண நிர்ணயக் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.தரணி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான கூடுதல் செயலாளர் சதீந்தர் பால் சிங் மற்றும் கர்நாடக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஈ.வி. ரமணா ரெட்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
2024, அக்டோபர் 2 முதல் 28ம் தேதி வரை பொதுமக்களின் கருத்தை கேட்டறிந்த இந்த குழு தனது இறுதி அறிக்கையை கடந்த வாரம் BMRCL நிர்வாகத்திடம் சமர்ப்பித்தது.
பயணிகளின் சுமையை குறைக்க, நெரிசல் இல்லாத நேரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டுகள் அல்லது க்யூஆர் குறியீடு டிக்கெட்டுகளைக் கொண்ட வழக்கமான பயனர்கள் தொடர்ந்து 5 சதவீத தள்ளுபடியைப் பெறுவார்கள்.
டெக்கான் ஹெரால்டு அறிக்கையின்படி, மெட்ரோ இரயில்வே (செயல்பாடு மற்றும் பராமரிப்பு) சட்டம், 2002 இன் படி, புதிய கட்டண அமைப்பு ஜனவரி 2025 இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரித்து வரும் மின்சார செலவுகள் மற்றும் உள்கட்டமைப்பு சீரமைப்பு பணிகள் உள்ளிட்ட, அதிகரித்து வரும் செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த கட்டண உயர்வு செயல்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
அடிக்கடி பழுது மற்றும் விலை உயர்ந்த உதிரி பாகங்கள் தேவைப்படுவதால் பராமரிப்பு செலவு மட்டும் 300 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.