ஒரு வேகமாக வளர்ந்து வரும் நகரம் எப்படி நிலையாக உள்ளது என்று நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில், ஐந்து நகரங்களில் பெங்களூர் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) நடத்திய ஆய்வில், ஐந்து நகரங்களுடைய நகர்ப்புற பேண்தகைமை (sustainability) வரிசை ஒப்பிடப்பட்ட போது, பெங்களூரு (0.658) மற்றும் மும்பை (0.590) நகரில் தான் மிகக் குறைந்த நிலையான நகர்ப்புற அமைப்பு உள்ளது என்று காட்டுகிறது. சிங்கப்பூர் (0.773) முதலிடத்திலும் அதைத் தொடர்ந்து லண்டன் (0.771) மற்றும் ஷாங்காய் (0.669) நகரங்கள் மிகவும் நிலையான நகர்ப்புற அமைப்பு கொண்ட நகரங்களாக வெளியிடப்பட்டுள்ளது.
“ஒரு நகரத்தை விரிவாக்கம் செய்யும் போது நெடுஞ்சாலைகள், நீர் வழங்கல் மற்றும் மின்சாரம் போன்ற உள்கட்டமைப்புக்காக, பொருட்கள் மற்றும் பல ஏக்கர் நிலங்கள் அழிக்கப்படுகின்றன. இது போக்குவரத்து நெரிசலை உண்டாக்கி பிரச்சினைகளைத் தீவிரப்படுத்துகிறது.
எனவே, அடிப்படை நகர்ப்புற உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கு மிகவும் குறைந்த வளங்கள் கொண்டு நகர்ப்புற மக்களுக்கு இன்றியமையாத பொருளாதார வாய்ப்புகளை வழங்க முடியாத வளர்ந்து வரும் நாடுகளில் நடக்கவிருக்கும் விரைவான நகர்ப்புற மாற்றங்களைத் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம் “, என்று ஆய்வின் முக்கிய ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான, மேலாண்மை ஆய்வுகள் துறை மற்றும் நிலையான தொழில்நுட்பங்களின் மையம், ஐஐஎஸ்சியைச் சார்ந்த பாலசந்திர பாட்டில் கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “நகர்ப்புற பச்சை புல்வெளிகளுக்கு இடம் இல்லாததாலும், நீர் மாசுபாட்டினாலும் பெங்களூரு குறைந்த பேண்தகைமை மதிப்பெண்களை பெற்றுள்ளது. அது நீர் மாசுபாட்டிற்காக கடைசி நிலையைப் பெற்றுள்ளது.
இதற்கு சான்றாக சில கவலைக்குரிய விஷயங்கள் பின்வருகின்றன:
ஆபத்தான வளர்ச்சி
* கடந்த 40 ஆண்டுகளில் பெங்களூரு கட்டிட பகுதியில் ஒரு ஆபத்தான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இந்த வளர்ச்சி 525% ஆக அதிகரித்து வருகிறது. ஒருகாலத்தில் பச்சை பசேலென இருந்த நகரத்தின் பசுமை இப்போது 78% ஆக சரிந்துள்ளது.
மறைந்து வரும் ஏரிகள்
*பரந்து விரிந்து பெரிய நகரப்பகுதியாக இருப்பதால் இந்நகரம் 79% நீர் நிலைகளை இழந்துள்ளது.
*சட்டவிரோத கட்டிடங்களால் 54% ஏரிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 66% ஏரிகளில் கழிவுநீர் கலக்கின்றன, 14% ஏரிகள் சேரிகளால் சூழப்பட்டுள்ளன மற்றும் 72% ஏரிகள் நீர்ப்பிடிப்பு பகுதி இல்லாமல் இருக்கின்றன.
*நில மற்றும் நீர் பயன்பாட்டிற்கு எந்த முறையான கொள்கையும் இல்லை. நிலங்களின் அரசியல்வாதிகளின் கனவுகளாலும் கற்பனைகளாலும் சுரண்டப்பட்டு வருகின்றன.
* கட்டுமான குப்பைகள் மற்றும் கழிவுநீர் ஆகியவற்றை கடலில் கொட்டுவது, மற்றும் வாகனங்களிலிருந்து வெளிப்படும் மாசு போன்றவை மிகப் பெரிய கவலையாக இருந்து கொண்டிருக்கிறது.
குப்பை நெருக்கடி
* பெங்களூரு மாநகராட்சி (Bruhat Bengaluru Mahanagara Palike (BBMP)) அதிக பணத்தை திடக்கழிவு மேலாண்மைக்காக பெரிய அளவில் செலவழிக்கிறது; 2015-2016 பட்ஜெட்டில் 415 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது ஆனால் பெங்களூர் குப்பை நெருக்கடியை தொடர்ந்து எதிர்கொள்கிறது.
வெள்ளப் பெருக்கிற்கு உட்பட்டது
* வடிகால் இணைப்பினை சிதைப்பது பிரச்சனையை அதிகரிக்க மட்டுமே செய்கிறது, பெங்களூரில் மேலும் தங்கமுடியாமலும் வெள்ளப்பெருக்கிற்கு காரணமாகவும் இருக்கிறது.
இந்த அறிக்கையினை பெங்களூரு மாநகராட்சி ஒரு எச்சரிக்கை மணியாய் எடுத்துக்கொண்டு உரிய திட்டங்களைத் தீட்டி, எதிர்கால சந்ததி வாழ ஏற்ற இடமாய் பெங்களூரு உள்ளிட்ட இடங்களை தக்க வைக்க இந்திய அரசு, கர்நாடக மாநில அரசுகள் முன்வர வேண்டும். சுவச் பாரத் என்று விளம்பரங்களில் மக்கள் வரிப்பணத்தினை வீணாக்காமல் உரிய மேம்பாட்டுத் திட்டங்களை தீட்ட வேண்டும் என்பதே பத்திரிக்கை.காமின் கருத்து.