பெங்களூர்: ஐபிஎல் வெற்றியை கொண்டாடிய ஆர்சிபின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நிவாரண தொகையை உயர்த்தி ரூ.25 லட்சம் என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டு (2025) நடைபெற்ற ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதன்முறையாக ஆர்சிபி அணி பெற்றது. அதாவது ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக, அதுவும் 18 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆர்சிபி எனப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இது கர்நாடக மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, முதன்முறையாக ஐபிஎல் கோப்பை தட்டிச்சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆர்சிபி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) அணியின் வெற்றிப் பேரணி பெங்களூ சின்னச்சாமி ஸ்டேடியம் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த வெற்றி பேரணியை ஒரு வாரம் தள்ளி நடத்தலாம் என காவல்துறை கூறிய நிலையில், ஏற்க மறுத்த கர்நாடக மாநில காங்கிரஸ் அரசும், ஆர்சிபி நிர்வாகமும் வெற்றி பேரணியை நடத்தினர். இந்த வெற்றி பேரணியின் விழா நடைபெறு ம் ஸ்டேடியத்தில் சுமார் 3500 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற நிலையில், மாநிலம் முழுவதும் இருந்து வந்த கட்டுக்கடங்காத ரசிகர்களின் கூட்டத்தைல் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பலியான நிலையில், 47 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சோக சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆர்சிபியின் வெற்றியை, ஆளும் ஆட்சியாளர்கள் தங்களது வெற்றிபோல பாவித்து பேசியதும், காவல்துறையினரின் ஆலோசனை ஏற்க மறுத்ததும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இந்த நிலையில், இன்று மாநில முதல்வர் சித்தராமையா, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ஆர்சிபி அணி நிர்வாகமும் தனியாக நிவாரண தொகை அறிவித்துள்ள நிலையில், அரசும் நிவாரண தொகையை உயர்த்தி உள்ளது.
முன்னதாக, இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த தொகை பற்றாது இன்னும் உயர்த்தி வழங்கவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்தது. அதை ஏற்று மாநில காங்கிரஸ் முதல்வர், முதலமைச்சர் சித்தராமையா இந்தத் தொகையை உயர்த்தி 25 லட்சம் ரூபாயாக அறிவித்துள்ளார். இந்த உயர்வு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மேலும் நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை KSCA நிர்வாகிகள் மீது எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அமமாநில காவல்துறைக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இப்படியான சூழலில், இந்த சம்பவத்தை அடுத்து, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெய்ராம் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தார்மீக பொறுப்பை ஏற்று, இந்த துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக அவர்கள் கூட்டாக அறிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.