பெங்களூரு நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 40 கி.மீ.க்கு சுரங்கப்பாதை அமைக்க பெங்களூரு மாநகராட்சி (பிபிஎம்பி) திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தில் இரண்டு வழித்தடங்களில் சுரங்க சாலைகளை அமைக்க விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) ஏற்கனவே முடித்துவிட்டதாக பிபிஎம்பி தெரிவித்துள்ளது. இருந்தபோதும் இந்த திட்டத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

ஹெப்பல் மேம்பாலத்தை சில்க் போர்டு சந்திப்புடன் இணைக்கும் வகையில் வடக்கு-தெற்காக 18 கி.மீ. நீளத்திற்கும் KR புரத்தை மைசூர் சாலையுடன் இணைக்க கிழக்கு-மேற்காக 22 கி.மீ. நீளத்திற்கும் சுரங்க சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.

இரு வழி சுரங்கப்பாதையுடன் ஒப்பிடும்போது ஒற்றை குழாய் சுரங்கப்பாதை மிகவும் சிக்கனமாக இருக்கும் என்று சாத்தியக்கூறு ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

இந்த மெகா திட்டத்திற்காக திறந்த சந்தையில் இருந்து ரூ.19,000 கோடி கடனை பெற ஆணையம் உத்தேசித்துள்ளதாக பிபிஎம்பி தெரிவித்துள்ளது.

மேலும், இந்த திட்டத்திற்கான கடனுக்கான உத்தரவாதமாக மாநில அரசு செயல்பட ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சுரங்கப்பாதையின் ஒரு பகுதியை நிர்மாணிப்பதற்கு தனியார் முதலீடு பயன்படுத்தப்படும் என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.

ஆரம்பத் திட்டம் வெற்றி பெற்றால், கடனின் ஒரு பகுதி கேஆர் புரத்திலிருந்து நாயண்டஹள்ளி வரையிலான வேறு நிலத்தடி இணைப்புக்கு நிதியளிக்கவும் ஒதுக்கப்படும்.

முழு திட்டமும் இரண்டு நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது; வடக்கு-தெற்கு வழித்தடத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான கட்டணம் உட்பட ரூ.16,500 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6,500 கோடியை பிபிஎம்பி முதலீடு செய்ய உள்ளது, மீதமுள்ள தொகை தனியார் நிறுவனங்களால் நிதியளிக்கப்படும்.

இரண்டாவது கட்டமாக கே.ஆர்.புரத்தில் இருந்து நாயண்டஹள்ளி வரையிலான 28 கிமீ நிலத்தடி சாலை அமைக்கப்பட்டுள்ளது என்று பிபிஎம்பி தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ.25,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.