சென்னை: பெங்களூரு – சென்னை விரைவுச்சாலை 2025 ஆண்டு இறுதியில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 65 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகள் முடிவடைய மேலும் 9 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை ஆகும் என தெரிவித்துள்ளனர். அதன்படி, 2025 ஆகஸ்ட் மாதத்திற்குள் இவை நிறைவுபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான விரைவுச்சாலை பணிகள்கள் நடைபெற்று வருகிறது. இதன் மொத்த தூரம் 260 கி.மீ., . இதில் கர்நாடகா பகுதி, 71 கி.மீ., இந்த நான்கு வழி விரைவுச்சாலை, கர்நாடகா, ஆந்திரா வழியாக தமிழகத்தை அடைகிறது. இந்த பணிகள் 17,900 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நடந்து வருகின்றன. இந்த சாலை பணிகள் முழுமை பெறும்போது, தற்போதைய 6 மணி நேர பயணம், 3 மணி நேரமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வேகமாக, இந்த எக்ஸ்பிரஸ் சாலையில் மணிக்கு 120 கி.மீ., வரை செல்லலாம். இந்த திட்டத்தை எதிர்காலத்தில் எட்டு வழிச்சாலையாக விரிவுபடுத்தவும் வாய்ப்பு உள்ளது. இந்த விரைவு சாலையில் கர்நாடகாவில் ஹொஸ்கோட், மாலுார், தங்கவயல் ஆகிய இடங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்த சாலை பணிகள் தமிழகத்தில் 65 சதவீதம் நிறைவுபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கி 105.7 கி.மீ தொலைவிற்கு மேற்கொள்ளப்படுகிறது. இந்த விரைவுச்சாலை ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி ஆந்திர மாநிலத்தின், குடிபாலா பகுதியில் முடிவடைந்து பெங்களூருவை அடைகிறது. இப்பணிகள் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சாலையில், வாலாஜாபேட்டையில் இருந்து அரக்கோணம் வரையிலான 24.50 கி.மீ சாலை பணிகள் சுமார் 84 சதவீதத்திற்கும் மேலாக நிறைவடைந்துள்ளது. இந்த பிரிவில் குடிமராமத்து பணிகளுக்காக ரூ. 662.7 கோடியும், பயன்பாடுகளுக்காக ரூ. 20.46 கோடியும் ஒதுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, குடிபாலா – வாலாஜா பகுதியில் 24 கி.மீ சாலை பணிகள் 70 சதவீதம் நிறைவுபெற்றுள்ளது.
மேலும், காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 31.07 கி.மீ சாலையில் 64 சதவீதம் நிறைவுபெற்றுள்ளது. அரக்கோணம் – காஞ்சிபுரம் வரையிலான சாலை பணிகள் 52 சதவீதம் நிறைவுபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தில் 34 பெரிய பாலங்கள் மற்றும் 31 சிறிய பாலங்கள் இடம்பெற்றுள்ளன. இவை ஒருங்கிணைந்து 15 கி.மீ தொலைவிற்கு இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் 840 மீட்டர் தொலைவிற்கு நீளமான பாலம் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தில் 6 சுங்கச்சாவடிகள் இயக்கப்படவுள்ளதாககவும் கூறப்படுகிறது.
பெங்களூரு — சென்னை விரைவு சாலை திட்டம், ஒரு மைல் கல்லாக விளங்கும். இந்த சாலையால் கர்நாடகா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களும் பயன்பெறும்.
இந்த விரைவு சாலைப் பணிகளை, 2024 மார்ச் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய நிலையை கவனித்தால், 2025 இறுதியில் தான் முழு பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு- – சென்னை விரைவு சாலைத் திட்டம், பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்பது உறுதி.