Bengal not afraid of BJP’s intimidation: Mamata Banerjee

 

பாஜகவின் அச்சுறுத்தலுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி தெரிவித்துள்ளார்.

 

கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மம்தா பாணர்ஜி பாஜகவையும், மோடியையும் கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது:

 

டெல்லியைக் கைப்பற்றியதைப் போல மேற்குவங்கத்திலும் அதிகாரத்தைக் கைப்பற்றி விடலாம் என பாஜக பல தந்திரங்களைக் கையாள்கிறது. திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களை சிபிஐ மூலம் மிரட்டிப்பார்க்கிறது. இதற்கெல்லாம் மேற்குவங்கம் பயப்படாது. குஜராத்தில் சரியாக ஆட்சி நடத்த முடியாத பாஜக, மேற்கு வங்கத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றப் பார்க்கிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது, கருப்புப் பணத்தை மீட்போம் என்று கூறிய பாஜகவால் இன்றுவரை அதனை நிறைவேற்ற முடியவில்லை. தேர்தல் நேரங்களில் இதுபோன்ற வாக்குறுதிகளை அளிப்பது எளிது. ஆனால் அவற்றை நிறேவற்றுவது கடினம். தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் அமித் ஷா, இரவு விருந்தை நட்சத்திர உணவு விடுதியில் உட்கொள்கிறார். இதுபோன்ற போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் அரசியலையெல்லாம் இனி மக்கள் நம்பத் தயாராக இல்லை.  நாங்கள் வளர்ச்சித் திட்டங்களை நிறவேற்றியதன் மூலம் தலைநிமிர்ந்து நிற்கிறோம். நாங்கள் அடைந்திருக்கும் வளர்ச்சியுடன் வேறு யாரையும் ஒப்பிட முடியாது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 7சதவீதமாக இருக்கும் நிலையில், மேற்கு வங்கத்தின் வளர்ச்சியோ 10 சதவீதமாக உள்ளது. சேவைத்துறையில் இந்திய அளவிலான வளர்ச்சி விகிதம் 9 சதவீதம்தான். மேற்குவங்கத்தின் சேவைத்துறை 13.99 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

 

ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து திரிணாமூல் காங்கிரஸ் அனைத்து பிரிவு மக்களுக்காகவும் பாடுபடுகிறது. பாஜகவோ மேற்கு வங்கத்தை பிரித்தாளும் அரசியல் மூலம் கைப்பற்றப்பார்க்கிறது. காவிக்கட்சியின் தந்திரத்திற்கு மக்கள் ஒரு போதும் பலியாகி விடக்கூடாது.

 

கொல்கத்தாவில் இருக்கும் தேநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தை, அஸ்ஸாமுக்கு மாற்ற பாஜக முயற்சிக்கிறது. மேற்குவங்கத்திடம் இருந்து ஏன் அதைப் பறிக்க வேண்டும்? சிலர் எனக்கு சவால் விடுக்கிறார்கள். நான் அந்த சவாலை ஏற்கிறேன். டெல்லியை (மத்திய அரசை) நாங்கள் கைப்பற்றியே தீருவோம். திரிணாமூல் காங்கிரஸ் பாஜகவுக்கு ஒரு போதும் பணியாது.”

 

இவ்வாறு பாஜகவுக்கு பதிலடி கொடுத்தும் சரமாரியாக தாக்கியும் மம்தா பாணர்ஜி பேசியுள்ளார். மேற்கு வங்கத்தை வளர்ச்சியில் பின் தங்கிய மாநிலமாக மம்தா பாணர்ஜி ஆக்கி விட்டதாக அமித் ஷா சில நாட்களுக்கு முன்னர் விமர்சித்திருந்தார்.