லட்சக்கணக்கான ஏழைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீடு வழங்கி உள்ளதாக கூறிவரும் நிலையில் சுமார் 75 வீடுகள் மாயமானதாக மத்திய பிரதேசத்தில் இருந்து புகார் எழுந்துள்ளது.
பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் சத்னா மாவட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் ‘கிரஹ பிரவேஷ்’ நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
காணொளி காட்சி மூலம் கலந்து கொண்ட பிரதமர் பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கினார்.
இந்த மாவட்டத்தில் உள்ள 698 கிராமங்களில் பல கிராமங்களில் உள்ள மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியிருந்தும் தங்களுக்கு வீடு எதுவும் கிடைக்கவில்லை என்று புகாரளித்தனர்.
மேலும், வீடுகட்ட பணம் வழங்கப்பட்டதாக கணக்கு காண்பித்துள்ளவர்களில் பலர் தற்போது உயிருடன் இல்லையென்றும் அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் எதுவும் வரவு வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதுபோல் சுமார் 75 வீடுகள் இறந்தவர்களின் பெயரில் கட்டப்பட்டுள்ளதாக பணம் வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த முறைகேடு குறித்து விசாரிக்க 10 குழுக்களை அமைத்து மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.