பிரசல்ஸ்: முன்னாள் பெல்ஜியம் மன்னர் இரண்டாம் ஆல்பர்ட்டிற்கு திருமணத்திற்கு வெளியே பிறந்த மகள், நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு இளவரசி அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
டெல்ஃபைன் போயல் என்ற பெயருடைய அந்தப் பெண்மணியின் தற்போதைய வயது 52. அவரின் தாயார் பெயர் பரோனெஸ் டி செலிஸ் லாங்சேம்ப்ஸ். முன்னாள் மன்னர் இரண்டாம் ஆல்பர்ட்டுக்கும், டெல்ஃபைனின் தாயாருக்கும் 18 ஆண்டுகள் உறவு இருந்ததாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதாவது, இரண்டாம் ஆல்பர்ட், அதிகாரப்பூர்வமாக மன்னராகப் பொறுப்பேற்கும் முன்னதாக இந்த உறவு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு முதன்முதலாக தனது உரிமை கோரலை வெளிப்படுத்தினார் டெல்ஃபைன். அதனையடுத்து, கடந்த 2013ம் ஆண்டு, தனக்கான சட்டப்பூர்வ அரச குடும்ப அந்தஸ்து உரிமைக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அவர்.
ஆனால், டெல்ஃபைனின் இந்த உரிமை கோரலை மன்னர், நீதிமன்றம் டிஎன்ஏ பரிசோதனைக்கு வற்புறுத்திய காலம் வரை மறுத்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பரிசோதனைக்கு மன்னர் உடன்படும் வரை, தினசரி 5586 டாலர்களை டெல்ஃபைனுக்கு அளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, தற்போது டெல்ஃபைனுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. இனிமேல் அவர் இளவரசி அந்தஸ்தைப் பெறுவார். அவர் மட்டுமல்லாமல், அவரின் குழந்தைகளுக்கும் அரச குடும்ப அந்தஸ்து கிடைத்துள்ளது.