பின்கோம், பெல்ஜியம்
பெல்ஜியம் நாட்டில் கொரோனாவால் தாக்கப்பட்ட ஒரு மூதாட்டி வெண்டிலேட்டர் வேண்டாம் எனத் தியாகம் செய்து மரணம் அடைந்துள்ளார்.
உலக மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா தொற்று அமெரிக்காவில் அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளால் ஐரோப்பாவில் அதிக அளவில் பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு மூச்சுத் திணறல் உண்டாவதால் வெண்டிலேட்டர் தேவை அதிக அளவில் உள்ளது.
வெண்டிலேட்டர்கள் விலை அதிகம் என்பதால் பல மருத்துவமனைகளில் குறைவான அளவில் இவை உள்ளன. இதனால் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை உள்ளது. இந்த வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை பெல்ஜியம் நாட்டிலும் உள்ளது.
பெல்ஜியம் நாட்டில் உள்ள லுபீக் அருகில் உள்ள பின்கோம் என்னும் பகுதியில் வசிக்கும் 90 வயதான மூதாட்டி சுசேன் ஹோலேர்ட்ஸ் என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுக் கடந்த மார்ச் 20 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பாதிப்பு அதிகரித்ததால் கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
அப்போது சுசேன் மருத்துவர்களிடம், “நான் நன்கு வாழ்ந்து விட்டேன். எனக்கு செயற்கை சுவாசம் தேவை இல்லை. இந்த வெண்டிலேட்டரை யாராவது இளைய நோயாளிகளுக்கு பயன்படுத்தி அவர்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். சுசேன் கொரோனாவால் உயிர் இழந்து அவருடைய உடல் எரியூட்டப்பட்டுள்ளது..
அவருடைய மகள் ஜுடித் இது குறித்து, “எனது தாய் தனது வயது மூப்பு காரணமாக இளைய தலைமுறையினருக்குத் தியாகம் செய்து உயிர் இழந்துள்ளார். அவருடைய உடலைப் பார்த்து இறுதி வணக்கம் செலுத்தவோ அவருடைய இறுதி சடங்குகளில் கலந்துக் கொள்ளவோ இயலாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.