கோபத்தில் இருப்பவர்கள் பொருட்களை உடைத்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்துவதற்காக சீனாவில் பிரத்யேக கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. யாருக்காவது கோபம் ஏற்பட்டால் அந்த கடையினுள் சென்று பொருட்களை உடைத்துக் கொண்டால் அவர்களின் கோபம் குறைந்து மன அமைதி அடைய முடியும் என்பதே இந்த கடையின் முக்கிய குறிக்கோள்.

china

பொதுவாகவே சிலருக்கு கோபம் வந்தால் கையில் கிடைக்கும் பொருட்களை தூக்கி எறிய வேண்டும் அல்லது உடைக்க வேண்டும் என்று தோன்றும். தொலைப்பேசி உள்ளிட்ட பொருட்கள் கோபத்திற்கு அவ்வபோது பலியாகின்றன. இப்படி கோபப்படும் நபர்களுக்காகவே சீனாவில் வித்யாசமான கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த கடைக்கு வரவேற்பும் வெகுவாக கிடைத்துள்ளன.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கடைக்கு “ஆங்ரி ரூம்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அறையில் டிவி, கைக்கடிகாரம், தொலைப்பேசி என அனைத்து பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. அதாவது, அளவுக்கு மீறி கோபம் ஏற்படும் நபர்கள் அந்த கடைக்கு சென்று பணம் செலுத்தி விட்டு தங்கள் ஆத்திரத்தை அங்குள்ள பொருட்களின் மீது வெளிப்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் பொருட்களை கோபத்தில் உடைக்கும்போது பின்னணியில் இசையும் ஒலிக்கப்படுகிறது.

இவ்வாறு உடைக்கப்படும் பொருட்களை தேவையற்ற பழைய பொருட்களை விற்கும் கடைகளில் இருந்து அந்த கடை உரிமையாளர் விலைக் கொடுத்து வாங்கி ஆங்கி ரூமில் வைத்துள்ளார். இந்த ரூமிற்குள் நுழைந்து அரை மணி நேரத்திற்கு பொருட்களை உடைக்க இந்திய ரூபாயில் 5,000 வசூலிக்கப்படுகிறது. இதற்காக பயனாளிகளுக்கு பிரத்யேக பாதுகாப்பு உடைகளும், பொருட்களை உடைக்க உருட்டு கட்டைகளும் வழங்கப்படுகிறது.

இந்த கடைக்கு பெரும்பாலும் 20 முதல் 35வயதுக்குட்பட்டவர்களே வந்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி செல்கின்றனர். இப்படி ஒரு வித்யாசமான கடைக்கு மக்கள் மத்தில் வரவேற்பும் கிடைத்துள்ளது. வாடிக்கையாளார்களின் மன அழுத்தத்தை போக்கவே இதுபோன்ற கடையை திறந்ததாக கூறும் கடை உரிமையாளர் வன்முறையை ஊக்குவிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.