மும்பை:
சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சிஏஜி அறிக்கை எதிரொலியால், ரயில் ஏசி கோச்சில் போர்வைகள் வைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையின்படி, ஏசி ரயில் கோச்சில் பிரயாணிகளுக்கு தரப்படும் போர்வைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் துவைக்கப்படுவதில்லை என்று தெரியவந்தது. இதுபோன்ற நடவடிக்கைகள் ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, சுமார் 4 ஆண்டுகளாக தொடர்ந்து வந்துள்ளன. இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது, ரயில்வே நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஏசி கோச்சில் வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ் அளவிலிருந்து 24 டிகிரி செல்சியஸ் அளவு வைக்கப்படும். அதே போல் ஏசி கோச்சில் பயன்படுத்தப்படும் போர்வைகளை சலவை செய்ய ரூ.55 செலவாகும் போதிலும், அதற்காக பயணிகள் சார்பில் வெறும் ரூ.22 மட்டுமே வசூலிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இது ரெயில்வேக்கு அதிகப்படியான செலவாகிறது.
ஏசி கோச்சின் போர்வைகள் உரிய காலத்திற்குள் சலவை செய்யப்படுவதில்லை என புகார் எழுகிறது. ஆகவே தரமான சேவையை பயணிகளுக்கு அளிக்க, இனி கோச்சில் போர்வைகள் மற்றும் வெள்ளைநிறத் துணிகள் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயின் போர்வை கிடையாது என்னும் அறிவிப்புக்கு பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
“சேவை சரியில்லை என்று கூறினால் அந்த சேவையே கிடையாது என்று முடிவெடுப்பது நல்ல நிர்வாகத்துக்கு அழகா” என்று பயணிகள் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.
ரெயில்வே நிர்வாகம் செவி சாய்க்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி!