டில்லி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் இந்தியாவின் ஆன்மா காயம் அடைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே மாநிலங்களவை மற்றும் மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.   நாடெங்கும் பல மாநிலங்களில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.  வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ளது.

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம் இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார்.

அந்தக் கட்டுரையில் சிதம்பரம்,

“முகத்திரை கிழிந்துள்ளது.  நகங்கள் வெளியே தெரிகின்றன.

இந்து ராஜ்ய திட்டம் வேகம் அடைந்துள்ளது.  இதில் இஞ்சின் பிரதமர் மோடி,  சக்கரங்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இதை வடிவமைத்து தற்போது ஆர்வமுடன் கவனிப்பது ஆர் எஸ் எஸ்.

இஸ்லாமியருக்கு தகவல்

மக்களவை தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்ற உடன் அவசரமாகத் தனது ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றி வருவது ஆச்சரியமாக உள்ளது.  முத்தலாக் தடை, அசாம் மாநில தேசிய குடியுரிமை பதிவேடு, விதி எண் 370 விலக்கம், அதைத் தொடர்ந்து தற்போது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா.  இவை அனைத்தும் இந்து ராஜ்ய திட்டத்தை முன்னேற்றுவதில் ஒரு பகுதி ஆகும்.

இந்த நடவடிக்கைகள் அனைத்துக்கும்  பின்னணியில் இஸ்லாமியருக்கான தகவல் உள்ளது  இந்தியாவில் இஸ்லாமியர்கள் சம உரிமை உள்ள குடிமகக்ள் இல்லை என்பதும் கோல்வாக்கர் – சாவர்க்கரின் இந்தியா ஒரு இந்து தேசம் என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்கவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நிறையக் கேள்விகள்.  பதில் இல்லை

இந்த மசோதா என்ன சொல்கிறது? ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளைத் தேர்ந்தெடுத்து அதில் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்ற ஆறு ‘சிறுபான்மை சமூகங்களை’ தேர்வு செய்கிறது.

கடந்த 2014 ஆம் வருடம் டிசம்பர் 31 அன்று அல்லது அதற்கு முன்னர் இந்தியாவுக்குள் நுழைந்த மூன்று நாடுகளில் ஒன்றில் இருந்து ஆறு சமூகங்களில் ஒன்றைச் சேர்ந்த எந்தவொரு நபரும் சொந்த நாட்டில் ‘துன்புறுத்தப்பட்டார்’ என்றும், எனவே, ஒரு நிறைவேற்று உத்தரவின் பேரில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்றும் அது கருதுகிறது.

இந்த மசோதாவின் மூலம் வெளிநாட்டினர் சட்டம் மற்றும் பாஸ்போர்ட் (இந்தியாவுக்குள் நுழைதல்) சட்டத்தின் விதிகளின் படி அத்தகைய நபர் ஒரு ‘சட்டவிரோத குடியேறியவர்’ ஆக இருக்க மாட்டார்.  சுருக்கமாக, திருத்த மசோதா குடியுரிமை பெற ஒரு புதிய வழியை அறிமுகப்படுத்தியுள்ளது – நிர்வாக குடியுரிமை.

இது குறித்துப் பல கேள்விகள் எழுகின்றன, அவை கேட்கப்பட்டாலும் அரசிடம் பதில்கள் இல்லை:

1. இலங்கை, மியான்மர், பூட்டான் மற்றும் நேபாளம் போன்ற அண்டை நாடுகளை விட்டு பலர் வெளியேறி உள்ள நிலையில் இந்த மூன்று நாடுகள் மட்டுமே ஏன் தேர்வு செய்யப்பட்டன?

2. அஹ்மதியாக்கள், ஹசாராக்கள், பலோச்சிகள், ரோஹிங்கியாக்கள், யூதர்கள் போன்ற பெரும்பான்மையினரைத் தள்ளி விட்டு ஆறு சிறுபான்மை சமூகங்கள் மட்டுமே பிற சமூகங்கள் மட்டும் ஏன் தேர்வு செய்யப்பட்டன?

3. ஆபிரகாமிய மதங்கள் மூன்று: அதில் யூத மதத்தையும் இஸ்லாத்தையும் விட்டுவிட்டு, கிறிஸ்தவம் மட்டும் ஏன் சேர்க்கப்பட்டது?

4. இந்துக்கள் சேர்க்கப்பட்டனர், ஆனால் இலங்கை இந்துக்கள் ஏன் விலக்கப்பட்டனர்?   கிறிஸ்தவர்கள் சேர்க்கப்பட்ட போதிலும் பூட்டானிய கிறிஸ்தவர்கள் ஏன் விலக்கப்பட்டனர்?

5. மத துன்புறுத்தல். மொழியியல், அரசியல், கலாச்சார, சாதி போன்ற பிற துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களைப் பற்றி மசோதாவின் கருத்து என்ன? உள்நாட்டுப் போர்களில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கருத்து என்ன?

6. இறுதித் தேதியாக டிசம்பர் 31, 2014 அறிவிக்கப்பட்டது ஏன்? அசாம் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இறுதித் தேதியினான மார்ச் 25, 1971 ஏன் மாற்றப்பட்டது? பிந்தியது ஏன் நிராகரிக்கப்பட்டுள்ளது?

7. திருத்தப்பட்ட சட்டத்தின் விதிகளிலிருந்து “அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அசாம், மேகாலயா, மிசோரம் அல்லது திரிபுராவின் பழங்குடிப் பகுதி” மற்றும் ‘தி இன்னர் லைன்’ இன் கீழ் உள்ள பகுதி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிப்பதன் நோக்கம் என்ன? அத்தகைய விலக்கின் விளைவுகள் என்ன?

8. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா (சிஏபி) மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு (என் ஆர் சி) ஆகியவை இணை பிரியாத இரட்டையர்கள் அல்லவா? எது முதலில் செயல்படுத்தப்படும்?

9. தாங்கள் இந்தியாவில் பிறந்தவர்கள் அல்லது 1971 மார்ச் 25க்கு முன்னர் இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் எனக் கூறியவர்கள், இப்போது தங்கள் கதையை மாற்றிக்கொண்டு, தங்கள் சொந்த நாட்டில் மதத் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள் என்று ஏன் கூற வேண்டும்? இதில் எந்த கூற்று பொய் மற்றும் எந்த கூற்று உண்மை?

முஸ்லிம்களைத் தவிர்ப்பதன் விளைவுகள்

சிஏபி மற்றும் என் ஆர் சி  இரண்டும் செயல்படுத்தப்பட்டால், என் ஆர் சி இன் கீழ் விலக்கப்பட்ட முஸ்லிமல்லாதவர்கள் சிஏபி இன் கீழ் சேர்க்கப்படுவார்கள். இதன் விளைவாக, முஸ்லிம்கள் மட்டுமே சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என அடையாளம் காணப்பட்டு விலக்கப்படுவார்கள். இதன் விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்.

இவ்வாறு விலக்கப்பட்டவுடன், எந்தவொரு நாடும் அல்லது நாடுகளும் இவர்களை ஏற்றுக்கொள்ள ஒப்புக் கொள்ளும் வரை, முகாம்களில் இருந்து விலக்கப்பட்ட நபர்களை அரசாங்கம் கவனிக்க வேண்டும்.  அவர்களுக்கான முகாம்கள் எங்குக் கட்டப்படும், எத்தனை தேவைப்படும்? ‘சட்டவிரோத குடியேறியவர்கள்’ தங்கள் வாழ்நாள் முழுவதும் முகாம்களில் தங்குவார்களா? அவர்களின் குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கும்?

இதைத் தவிர,  முகாம்களில் லட்சக்கணக்கான முஸ்லிம்களைச் சிறையில் அடைத்தல் நடவடிக்கைகளால் நாட்டில், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகள் இருக்கும். இந்தியாவின் இந்த  நடவடிக்கை எதிர்வினையாற்றி, இலங்கை, மியான்மர் மற்றும் பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் இந்தியாவுக்குக் குடியேற அந்நாடுகளால் அழுத்தம் கொடுக்கப்படும்.

அரசியலமைப்பின் 14 மற்றும் 21வது பிரிவுகளின் விதிமுறை மற்றும் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் ஆகியவற்றின் படி ​​சி ஏ பி  இன் அரசியலமைப்பு சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது குறித்து அரசாங்கம் கருத்தில் கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளன. நாடு முழுவதும் பெரும்பான்மையான மக்கள், பெரும்பான்மை இந்துக்கள், போராட்டங்களில் இணைந்துள்ளனர்.

சிஏபியால் ஏற்பட்டுள்ள கடுமையான கேள்விகள் பல இருந்தபோதிலும், இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் பாராளுமன்றம் அரசு நிர்வாகத்துடன் நன்கு ஒத்துழைத்தது.  இனி சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு ஒழுக்கத்தை மீட்டெடுக்கும் பணி நீதித்துறை மீது விழும்.”

என தெரிவித்துள்ளார்.