நியூ ஜெர்சி
அரியலூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் அருண் ராஜதுரை என்பவர் அமெரிக்க கொரோனா நோயாளிகளுக்கு ரசம் சமைத்து அளித்து அதன் பயன்பாட்டை அந்நாடெங்கும் பரப்பி உள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் கொரோனாவை தடுக்க அதிக சக்தி அளிக்கும் உணவுகள் அதிக அளவில் பரவி வருகிறது. அதில் முக்கியமானதாகத் தமிழக உணவான ரசம் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக அதில் சேர்க்கப்படும் இஞ்சி, மஞ்சள் மற்றும் பூண்டு ஆகியவை நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது.
இந்த ரசம் பயன்பாட்டை அறிமுகம் செய்தவர் தமிழகத்தைச் சேர்ந்த சமையல் கலைஞரான அருண் ராஜதுரை என்பது குறிப்பிடத்தக்கதாகும். சுமார் 35 வயதாகும் அருண் அமெரிக்காவில் மூன்று மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு உணவு அளிக்கும் போது ரசத்தை அளித்தார். அதை ’நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சூப்’ என அழைத்த அமெரிக்கர்கள் அதிக அளவில் அருந்தத் தொடங்கி உள்ளனர்.
அருண் பணி புரியும் உணவு விடுதியான அஞ்சப்பார் ப்ரின்ஸ்டன் ஓட்டலுக்கு இந்த ரசத்துக்காகவே பலர் வருகை தருகின்றனர். அதிக அளவில் இங்கு விற்பனையாகும் ரசம் நியூ ஜெர்சி நகரில் மட்டுமின்றி, நியூயார்க், மற்றும் கனடா நாட்டு நகரங்களிலும் பரவி தினசரி 500 முதல் 600 கோப்பை ரசம் விற்பனை செய்யப்படுகிறது.
அருண் ராஜதுரை தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம் கொண்டான் அருகில் உள்ள மீன்சுருட்டி என்னும் ஊரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் திருச்சி ஐ எச் எம் கேடரிங் கல்லூரியில் பயின்றவர் ஆவார். கடந்த 5 வருடங்களாக நியூ ஜெர்சி நகரில் வசித்து வரும் இவர் கடந்த 2018 ஆம் வருடம் சிறந்த தென் கிழக்கு ஆசிய சமையல் கலைஞர் என்னும் விருதைப் பெற்றுள்ளார்.