பழனி:

63வயது பெண்மணி ஒருவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இது ஏதோ வெளிநாட்டில் என்று நினைத்துக்கொள்ள வேண்டும். நமது தமிழ்நாட்டில் ஈரோட்டில்தான் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த 63 வயதான செந்தமிழ்ச்செல்வி, 71 வயதான கிருஷ்ணன் தம்பதிக்குத்தான் செயற்கை கருவூட்டல் மூலம் இந்த அழகான குழந்தை பிறந்துள்ளது.

இந்த தம்பதிகளுக்கு  திருமணமாகி 42 ஆண்டுகள் ஆகி உள்ளது. ஆனால், அவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கவில்லை. கோவில் குளம் என்று எங்கெல்லாம் சுற்றியும் குழந்தை இல்லாத ஏக்கம் அவர்களை வாட்டியது.

இதன் காரணமாக, விஞ்ஞானத்தின் உதவியுடனாவது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என முயற்சியை மேற்கொண்டனர். இதிலும் ஆரம்பத்தில் சில சிரமங்களும், ஏமாற்றங்களும்  அவர்களுக்கு கிடைத்தன.

இருந்தாலும் மனந்தளராமல், பழனி, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டுவரும் தனியார் கருத்தரிப்பு மையத்தை அணுகி தங்களுக்கு குழந்தைச்செல்வம் பெற உதவி கோரினார். அதைத்தொடர்ந்து, பழனியில் உள்ள பழநி பாலாஜி கருத்தரிப்பு மைய மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தனர். அதன் காரணமாக செயற்கை முறையில் கருத்தரித்த செந்தமிழ்ச்செல்வி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

63 வயதான செந்தமிழ்ச்செல்விக்கு மூன்றரை கிலோ எடையுள்ள பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த வயதில் ஒரு குழந்தைக்கு தாய், தந்தை என்ற பெருமை பெற்றிருப்பதாக அந்த தம்பதிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.