சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு  தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.  தேர்தல் வாக்குப் பெட்டிகளை பழுது நீக்கி தயார் நிலையில் வைக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்  சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை போன்றே  5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.  ஏற்கனவே கடந்த 2019ம் அண்டு  2019ம் ஆண்டு அப்போதுஇருந்த  27 மாவட்டங்களில் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.  அதன்பின்னர் மேலும் 9 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு  தேர்தல் நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  2021ல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன.

இதுகுறித்து, சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளான, மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில், “ஊரக உள்ளாட்சிகளின் தேர்தலுக்கு தேவையான அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார் நிலையில் வைப்பது அவசியமாகிறது. இதில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வாக்குப்பெட்டிகளின் தற்போதைய தரம் மற்றும் நிலையை, இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து, வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தும் வகையில் அவற்றில் சிறிதளவு பழுதடைந்தவை, முழுமையாக பழுத்தடைந்தவற்றை தரம் பிரித்து வைக்க வேண்டும். சிறிய பழுதுகளை சரி செய்ய பெட்டி ஒன்றுக்கு ரூ.21 வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்படி அவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.