துபாய்: இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரெட்டில் தொடங்க உள்ள நிலையில், அங்கு சென்றுள்ள வீரர்கள் பலருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது, பிசிசிஐ மருத்துவக் குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு துபாயில், செப்டம்பர்-19ம் தேதி போட்டி தொடங்கி நவம்பர் 10ம் தேதி முடிவடைய உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, போட்டியில் கலந்துகொள்ளும் ஐபிஎல் அணி வீரர்கள் கடந்த வாரம் துபாய் சென்றடைந்தனர். அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், சிஎஸ்கே வீரர் உள்பட 13 பேருக்கு தொற்று உறுதியானதாக தகவல் பரவின. பின்னர் அடுத்த சில நாட்களுக்கு பிறகு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில், அனைவருக்கும் கொரோனா நெகடிவ் என சோதனை முடிவுகள் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிபிசிஐ மருத்துவ குழு உறுப்பினர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் இந்தியாவில் இருந்து துபாய்க்கு விமானத்தில் சென்றபோது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.