இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் எடுத்து இந்த போட்டியில் அதிகபட்ச ரன் எடுத்த இந்திய விரர் என்ற பெருமையை பெற்றார்.

இரண்டாவது இன்னிங்ஸில் மொத்த இந்திய அணியும் 36 ரன்களுக்கு சுருண்டு, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிககுறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்த அணி, என்ற சாதனையை பெற்றது விராட் கோலி தலைமையிலான இந்த அணி.

இந்த தோல்வியை தொடர்ந்து அடுத்து வரவிருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெல்லுமா என்று காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடாமல் நாடு திரும்பினார்.

விராட் கோலியின் இந்த திடீர் விஜயம் எதற்காக என்று புரியாமல் இருந்த இந்திய ரசிகர்களுக்கு, வரும் ஜனவரி மாதம் தனக்கு பிறக்கப்போகும் குழைந்தைக்காக தன் மனைவியுடன் சேர்ந்து காத்திருப்பதற்காக வந்திருக்கிறார் என்ற செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், துபாயில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் போது, சன் ரைசர்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் நடராஜனின் மனைவிக்கு அப்போது பெண் குழந்தை பிறந்தது.

முதல் முறையாக தந்தையான நடராஜனை ஐ.பி.எல். போட்டிகள் முடிந்தவுடன் துபாயில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்றது பி.சி.சி.ஐ.

டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய நடராஜனுக்கு, தொடர் நாயகன் விருது பெற்ற ஹர்திக் பான்டியா இந்த தொடரின் உண்மையான நாயகன் நடராஜன் தான் என்று புகழாரம் சூட்டினார்.

டி-20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதும், நடராஜனை டெஸ்ட் தொடரில் விளையாடவிடாமல் ஓரம்கட்டியது. மேலும், இந்திய அணி வலை பயிற்சியில் ஈடுபடும் போது பந்துவீசுவதற்கு மட்டுமே அவரை பயன்படுத்தியது.

தமிழக வீரர்கள் ஓரம் கட்டப்படுவது இது முதல்முறையல்ல, தற்போது அணியில் உள்ள மற்றொறு வீரரான அஸ்வின் பலமுறை இவ்வாறு ஓரம் கட்டபட்டிருக்கிறார்.

அணியின் கூட்டங்களில் தன் மனதில்பட்டதை ஒளிவுமறைவின்றி துணிவாக கூறும் ஆற்றல் படைத்த அஸ்வின் அதற்காகவே பல தொடர்களில் தொடர்ந்து விளையாட சந்தர்ப்பம் கிடைக்காமல் ஓரங்கட்டப்படிருக்கிறார்.

தனது 72 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 370 விக்கெட்டுகளை கைப்பற்றி உலகின் முன்னணி பந்து வீச்சாளரான அஸ்வின், ஐ.சி.சி.யின் சிறந்த வீரராக 2016-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டும் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லையென்றால் இந்த தொடரிலும் அஸ்வினை விளையாடவிடாமல் தடுக்க வாய்ப்புகள் அதிகமாகவே இருந்தது.

தொடர் முழுவதும் சோபிக்காத பேட்ஸமன்களுக்கு கூட அடுத்த தொடரில் வாய்பளிக்கும் போது அஸ்வின் போன்ற பந்து வீச்சாளர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

ஜனவரி மாதம் தன் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் விராட் கோலி – அனுஷ்கா ஜோடி போடப்போகும் ட்வீட்டுகளை கொண்டாட காத்திருக்கும் இந்திய ரசிகர்கள், அதேவேளையில் ஆஸ்திரேலிய பயணம் முடிந்து தனது குழந்தையை பார்க்க இருக்கும் நடராஜனை உற்சாகத்தோடு வரவேற்குமா என்பது கேள்விக்குறியே.

தன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினருடன் அவர்களுக்கு தேவையான நேரத்தில் பக்கத்தில் இருக்க நினைக்கும் வீரர்களுக்கு சலுகை வழங்குவதில் பாகுபாடு காட்டும் பி.சி.சிஐ.யின் இந்த போக்கை முன்னாள் இந்திய கேப்டன் கவாஸகர் உள்ளிட்ட பலர் வன்மையாக கண்டித்திருக்கிறார்கள்.