ஐமைக்கா: தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தினேஷ் கார்த்திக், கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக, அவருக்கு பிசிசிஐ தரப்பிலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வாங்கியுள்ள டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் டிரெஸ்ஸிங் அறையில் அவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. இந்தப் புகைப்படங்கள் பிசிசிஐ அமைப்பின் கவனத்திற்கு செல்லவே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உங்களின் மத்திய ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 32 டி-20 போட்டிகளில் இந்தியா சார்பாக இதுவரை பங்கேற்றுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு, பிசிசிஐ அமைப்பிடமிருந்து எந்த முறையான அனுமதியையும் தினேஷ் கார்த்திக் பெறவில்லை என்பதால், விளக்கம் கேட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.