மும்பை: நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக டி20 உலக கோப்பையை  வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ ரூ.131 கோடி பரிச தொகை அறிவித்து உள்ளது.

மார்ச் 8ந்தேதி குஜராத் மாநிலம் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற டி20 இறுதிப்போட்டியில்,  நியூசிலாந்து அணியை  96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது. இதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்த நிலையில், தற்போது பிசிசிஐ பரிசு தொகையை அறிவித்துள்ளது.

ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு இதுவரை இல்லாத அளவிலான ரூ.131 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’அஹமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து மதிப்புமிக்க கோப்பையை மூன்றாவது முறையாக இந்திய அணி வென்றுள்ளது. மேலும், டி20 உலகக் கோப்பையை தொடர்ந்து இருமுறை பெற்ற முதல் அணி என்ற சாதனையையும் இந்திய அணி பெற்றுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குக் காரணமான அணியின் வீரர்கள், ஊழியர்கள், தேர்வுக்குழு உறுப்பினர்கள் என அனைவருக்கும் பிசிசிஐ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. எதிர்காலத்தில் நமது அணி இதேபோன்று மேலும் பல வெற்றிகளைப் பெறவேண்டும்.

இந்த மாபெரும் வெற்றிக்காக ரூ. 131 கோடியை பரிசுத் தொகையாக இந்திய அணிக்கு பிசிசிஐ வழங்குகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு இதுவரை வழங்கப்பட்டதிலேயே அதிக அளவிலான பரிசுத்தொகை இதுவாகும்.

இதற்கு முன்னர் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு டி20 உலகக் கோப்பையை வென்றபோது ரூ. 125 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதுபோல, இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றபோது ரூ.58 கோடி பரிசுத்தொகை வழங்கப் பட்டிருந்தது. மேலும், கடந்தாண்டு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்றபோது ரூ. 51 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

[youtube-feed feed=1]