பஞ்சபூதங்களில் நீர் பிரதான இடத்தை வகிக்கிறது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது பெரியோர்கள் வாக்கு. நீரானது அகம் – புறம் இரண்டையும் சுத்தப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, நம் (முன்வினை) கர்மாவை குறைப்பதிலும் நீருக்கு நிகரானது வேறெதுவும் இல்லை.
நம் உடம்பிலும் நீரே அதிகளவில் இடம்பெற்றுள்ளது. இன்றைக்கும் சில பிரச்னைகளுக்கு பரிகாரம் சொல்கிறவர்கள் சமுத்திர ஸ்நானம், புஷ்கரணி தீர்த்த ஸ்நானம், நதி ஸ்நானம் செய்யச் சொல்கிறார்கள். காரணம், இங்கெல்லாம் இந்த புண்ணிய நீர்நிலைகளில் குளிப்பதால் நம் கர்மா குறையும் என்பது நம்பிக்கை. பொதுவாக எல்லோரும் தினமும் குளிக்கும்போது,
கங்கேச யமுனேசைவ கோதாவரி சரஸ்வதீ!
நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு!!
என்று சொல்லிவிட்டு குளித்தால், சப்த நதிகளும் நமது நீராடும் பாத்திரத்தில் எழுந்தருளிவிடும் என்பது நம்பிக்கை.
அதேபோல், பெண் குழந்தைகளை (எண்ணெய் தேய்த்து) குளிக்க வைக்கும்போது, நடுவிரலால் ஐந்து சொட்டு எண்ணெய் எடுத்து, பொட்டு வைப்பதுபோல் குழந்தையின் இடது தொடையில் வைப்பார்கள். ஆண் குழந்தைகளுக்கு வலது தொடையில் இதே முறையில் வைப்பார்கள்.
குழந்தைகள் வளர்ந்த பிறகு நெற்றி, இரு புஜங்கள், கைகள் என ஐந்து இடங்களில் எண்ணெயை தொட்டு வைப்பார்கள். எண்ணெய் தேய்க்கும்போது நாடியெல்லாம் சுறுசுறுப்பாகும். நாடிகள் சட்டென்று வேகம் அடைந்துவிடாமல், எண்ணெய் தேய்ப்பதனால் உண்டாகும் உத்வேகத்தை நிதானமாக ஏற்கும் வகையில், ‘ஏ… நாடிகளே! எண்ணெய் வைக்கப் போறேன்’னு மனத்தளவில் தயார் ஆவதற்காகவே, இந்த சம்பிரதாயம்.
அப்போது ஆண் பிள்ளைகளுக்கு, அஸ்வத்தமான், பரசுராமன், மார்க்கண்டேயன், ஹனுமன், விபீஷணன், மகாபலி சக்ரவர்த்தி, வியாசர் ஆகிய சிரஞ்ஜீவிகள் ஏழுபேரின் திருப்பெயர்களை உச்சரித்து வணங்கியும், பெண் பிள்ளைகள் எனில் அகல்யா, திரௌபதி, சீதா, தாரா, மண்டோதரி ஆகிய பதிவிரதையர் ஐவரின் திருப்பெயர்களைச் சொல்லி வணங்கியும் குளிக்கச் செய்வர். இந்த சிரஞ்சீவிகளையும், பதிவிரதைகளையும் ஸ்மரணிக்கும்போது நல்ல பலன்கள் கிடைக்கும், கர்மவினைகளும் படிப்படியாக குறையும்.
(நன்றி: ஆலயம் டாட் காம்)