வேலூரில் 25 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீடு ஒன்றின் தரை மட்டம் 4 அடி வரை எவ்வித சேதமுமின்றி உயர்த்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரமன்னன். இவருக்கு சொந்தமாக 25 ஆண்டுகள் பழமையான 800 சதுர அடிப்பரப்பளவில் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டின் அடிமட்டம் சாலையில் இருந்து சில அடிகள் தாழ்வாக இருந்தது. இதனால் அருகில் இருக்கும் கழிவு நீர் கால்வாயில் இருந்து தேங்கியிருக்கும் கழிவுநீர் வீட்டின் உள்ளே வந்துக் கொண்டிருந்தது. இதனை சரிசெய்ய வீட்டை இடித்துவிட்டு மீண்டும் புதிய வீடு கட்ட கஜேந்திர மன்னன் எண்ணினார். ஆனால், தந்தையின் வீட்டினை இடிக்க மணமில்லாமல் நண்பர்களிடம் வேறு வழி உள்ளதா என கேட்டுள்ளார்.
அப்போது சென்னையில் இதுசார்ந்து இயங்கும் தனியார் நிறுவனம் குறித்த விவரம் அவருக்கு தெரிய வந்துள்ளது. அந்த நிறுவன பணியாளர்கள், வீட்டை இடைக்காமலேயே உயர்த்தி தர இயலும் என கூறியுள்ளனர். இதையடுத்து சுமார் 200 ஜாக்கிகளை கொண்டு கட்டுமான பணியாளர்கள் பணிகளை தொடங்கினர். இதனால் வீட்டின் சுவற்றிற்கு எவ்வித பாதிப்பும், சிறிய விரிசலும் இன்றி தரைமட்டம் 2 அடி வரை உயர்த்தப்பட்டது. இந்த தொழில்நுட்பம் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது.
வீட்டின் தரைமட்டத்திற்கும், ஜாக்கிகளுக்கும் இடையேயான இடைவெளியில் இரும்பு கம்பிகள் சிறிய தூண்களைப்போல் கட்டப்பட்டுள்ளது. 21 நாட்கள் நடந்த இந்த பணியின் இறுதியில், 4 அடி வரை வீட்டின் தரைமட்டம் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது.