டெல்லி: தலைநகர் டெல்லியில் 107 போலி வக்கீல்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய பார் கவுன்சில் தெரிவித்து உள்ளது. இந்த நடைமுறை தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும்போலி பட்டதாரிகள், போலி வக்கீல்கள், போலி நீதிபதிகள் என அனைத்திலும் போலிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் போலி நீதிமன்றமே செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அதை நடத்தி வந்த போலி நீதிபதியும் கைது செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அதிகரித்து வரும் போலி வழக்கறிஞர்களை கண்டறித்து களையெடுக்க வேண்டும் என சமீப காலமாக நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து,  இந்திய பார் கவுன்சில்  டெல்லி பார் கவுன்சில் உள்பட  நாடு முழுவதும் உள்ள பார் கவுன்சில்களுக்கு, வழக்கறிஞர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து நடவடிக்கை உத்தரவிட்டது.

அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரை டெல்லியில் 107 போலி வக்கீல்களை கவுன்சிலில் இருந்து நீக்கி இருப்பதாக தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக பார் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போலி வக்கீல்கள் மற்றும் சட்ட நடைமுறையின் தரத்தை பேணாதவர்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு செய்வதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையையும், சட்ட அமைப்பையும் நெறிமுறையற்ற நடைமுறைகளிலிருந்து பாதுகாக்க இந்திய பார் கவுன்சில் தொடர்ந்து முயன்று வருகிறது’ என குறிப்பிட்டு இருந்தது. மேலும் அறிக்கையில், ‘முழுமையான விசாரணை மூலம் கடந்த 2019 முதல் ஆயிரக்கணக்கான போலி வக்கீல்கள் நீக்கப்பட்டு உள்ளனர். இதில் பெரும்பாலானோர் போலியான சான்றிதழ்கள் மற்றும் பதிவு செய்யும் போது தவறான தகவல்களை வழங்கியவர்கள் ஆவர். மேலும், தீவிரமான வக்கீல் பணிகளில் தோல்வி, பார் கவுன்சிலின் சரிபார்ப்பு செயல்முறைகளுக்கு இணங்காதது போன்றவையும் காரணமாகும்’ என்றும் கூறப்பட்டு உள்ளது. இதில் டெல்லியில் மட்டுமே 107 போலி வக்கீல்களை நீக்கி இருப்பதாகவும், அவர்களின் பெயரையும் பார் கவுன்சில் ஸ்ரீமாந்தோ சென் அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.